7.10.09

நவீன சாலைகளின் இன்னொரு முகம்

சாலைக் கட்டுமானத் துறையானது சாலைகளை மட்டும் அமைப்பதில்லை; தேசத்தையே கட்டியமைக்கிறது என்று சொல்லப்படுவதுண்டு.
உண்மைதான் அது. ஒரு நாட்டின் வளர்ச்சியின் முகம் சாலைகளாலும் அறியப்படுகிறது. இந்தியா இப்போது உலகின் அதிகமான சாலை இணைப்புகளைக் கொண்ட தேசம் என்ற பெருமையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவையும் ஏறத்தாழ 33.4 லட்சம் கி.மீ. சாலைகள் இணைப்பதாக தேசிய நெடுஞ்சாலைத் திட்ட அறிக்கை கூறுகிறது. ரூ. 1,600 கோடியில் கட்டப்பட்டிருக்கும் பந்த்ரா - வொர்லி பாலமாகட்டும்; ரூ. 60,000 கோடியில் அமைக்கப்படும் தங்க நாற்கரச் சாலைகளாகட்டும்; குண்டும் குழியுமான இந்தியச் சாலைகளின் முகம் மாறி வருகிறது. ஆனால், ஏனைய விஷயங்களைப்போலவே இந்தியச் சாலைகளும் பாலங்களும்கூட கொஞ்சம்கொஞ்சமாக இந்நாட்டின் ஆகப் பெரும்பான்மையினரான எளிய மக்களிடமிருந்து அந்நியமாகிக் கொண்டிருக்கின்றன. இந்தியச் சாலை மரபானது, மரங்களோடு இணைந்தது. மாமன்னர் அசோகர் சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட்டதற்காக இன்றளவும் பேசப்படுவதை நினைவுகூர்வது இங்கு பொருத்தமாக இருக்கும். வெப்ப நாடான இந்தியாவில் பகல் நேரப் பயணங்களுக்கு மரங்கள் எத்தனை முக்கியமானவை என்பதை உணர்ந்திருந்ததாலேயே, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும்கூட சாலை விரிவாக்கங்களின்போது மரம் வளர்ப்புக்குப் பெரும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவின் நவீன சாலைகளுக்கு முதல் களப்பலியே மரங்கள்தான். ஒவ்வொரு 100 கி.மீ. சாலையும் சராசரியாக 2,000 பெரு மரங்களை பலி கொள்வதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது (சிறு மரங்கள், செடி, கொடிகள் தனி). சூழலியல் சார்ந்து இப்பிரச்னையை அணுகுவது ஒருபுறமிருக்கட்டும். சாலைப் பயணங்களையே மிகக் கொடிய அனுபவங்களாக உருமாற்றிக்கொண்டிருக்கின்றன இந்தியாவின் மரங்களற்ற நவீன சாலைகள். ஆனால், வெக்கையும் வியர்வையும் தூசியும் புகையும் கலந்த இந்த அனுபவங்கள் எல்லோருக்குமானவை அல்ல; நடந்தோ, சைக்கிளிலோ, கூட்டம் நெருக்கியடிக்கும் பஸ்களிலோ பயணிப்போருக்கு மட்டுமே உரித்தானவை. ஆனால் குளிர் சாதன வசதியுள்ள அதிவிரைவு வாகனங்களில் பயணிப்போரிடம் கேட்டுப் பாருங்கள், நவீன சாலைகளின் உன்னதத்தைப் புல்லரிக்கக் கூறுவார்கள். மரங்கள் சின்ன உதாரணம்தான். இந்திய நவீன சாலைக் கட்டுமானத் துறை எந்தவோர் அம்சத்திலும் எளிய மக்கள் நலனைப் பிரதானமாகக் கொள்வதில்லை. போக்குவரத்துத் துறையும் அப்படியே. இந்தியாவின் தேசிய வாகனம் என்று ஒன்று நிர்ணயிக்கப்பட்டால், அது சைக்கிளாகவே இருக்க முடியும். நாடு முழுவதும் ஏறத்தாழ 25 கோடி சைக்கிள்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அதாவது, 25 கோடி சைக்கிள் ஓட்டிகள் இருக்கிறார்கள். எதிர்வரும் காலங்களில் பெட்ரோல் உற்பத்தி வீழ்ச்சியடையும்போது இந்த எண்ணிக்கை மேலும் மேலும் உயரக் கூடும். ஆனால், அனல் தகிக்கும் இந்தியாவின் நவீன ராட்சத சாலைகளையோ, பிரம்மாண்டமான மேம்பாலங்களையோ கட்டுபவர்கள் சைக்கிள் ஓட்டிகளின் நிலையை எந்த அளவுக்கு கணக்கில் எடுத்துக்கொள்கின்றனர்? பல கி.மீ. தொலைவுக்கு இடைவெளியின்றி நீளும் சாலை மையத் தடுப்புகள் கிராமப்புறக் குறுக்குவழிகளைப் பொருட்படுத்துகின்றனவா? சாலை "சிக்னல்'களில் கடைசி சில நொடிக் கணக்கில் பச்சை விளக்கைப் பார்த்துக் கடக்க எத்தனிக்கும் ஒரு சைக்கிள் ஓட்டி மஞ்சள் விளக்கு எரிந்து அணையும் 5 நொடிகளுக்குள் பிரம்மாண்டமான சாலையைக் கடப்பது சாத்தியம்தானா? இங்கு எல்லாவற்றிலுமே இந்தக் கதைதான். புதிய சாலைகளை அமைக்கவும் பழைய சாலைகளை விரிவாக்கவும் கிராமத்திலுள்ள உங்களுடைய நிலங்கள் அரசுக்குத் தேவைப்படும். ஆனால், உங்களுடைய கிராமத்தில் - உங்களுடைய நிலத்தில் அமையும் சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் உங்களையோ, உங்கள் கிராமத்தையோ பொருட்படுத்தாது. 'பாயின்ட் - டூ - பாயின்ட்'; 'நான் ஸ்டாப் எக்ஸ்பிரஸ்'... எத்தனை வக்கிரமான நீதி இது? பிரதமர் மன்மோகன் சிங்கும் அவருடைய அமைச்சரவை சகாக்களும் அடிக்கடி உதிர்க்கும் வாக்கியமான 'மனித முகம் பொருந்திய வளர்ச்சி'யில் அவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், அது இப்போது உடனடியாகத் தேவைப்படும் இடம் சாலைக் கட்டுமானத் துறைதான். அடுத்து, போக்குவரத்துத் துறை. ஏனெனில், அனல் தகிக்கும் ராட்சத சாலைகளிலும் பிரம்மாண்டமான மேம்பாலங்களிலும் ஒரு சைக்கிள் ஓட்டியின் நிலையைக் கற்பனைசெய்து பார்க்கும்போது நம்முடைய வளர்ச்சியின் முகம் மனிதத்தன்மை உடையதாக இல்லை; குரூரமானதாக இருக்கிறது!

பிரசுர விவரம்: தினமணி, 3 அக்டோபர்  2009

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home