தமிழ் ஆதிமொழியாக வேண்டுமா; அழியாமொழியாக வேண்டுமா?
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தொடக்க விழாவில், "தமிழே உலக முதல் தாய்மொழி'' என்று பிரகடனப்படுத்தியிருப்பதன் மூலம் காலங்காலமாக தமிழின் வளர்ச்சியை அழுத்திக்கொண்டிருக்கும் ஒரு கருத்தாக்கத்துக்குப் புத்துயிர் அளித்திருக்கிறார் முதல்வர் மு. கருணாநிதி.
இந்திய அரசின் செம்மொழி அங்கீகாரம், ஒரு மொழியின் 1500 - 2000 ஆண்டு பழைமையைக் குறிக்கிறது. இந்த அங்கீகாரத்துக்கான தமிழின் தகுதி சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறே, உலகின் தொன்மையான மொழிகளில் தமிழும் ஒன்று என்ற கூற்றும் சர்வதேச அளவில் பெரும்பான்மையான ஆய்வாளர்களால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், "தமிழே உலக முதல் தாய்மொழி'' என்கிற முதல்வரின் கூற்று, பிற்காலத்தில் அனேக ஆய்வாளர்களால் புறந்தள்ளப்பட்ட ஆய்வாளர் தேவநேயப் பாவாணரின் "உலக முதன்மொழி தமிழ்; உலக முதல் மாந்தர் தமிழர்'' என்ற கூற்றை மீண்டும் நிலைநாட்டும் நோக்கில் அமைந்திருக்கிறது. தொன்மையான ஒரு மொழிகுறித்துப் பேசுகையில், எம் மொழி பழைமையானது என்று கூறுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், எம் மொழிதான் ஏனைய எல்லாவற்றினும் பழைமையானது என்று கூற வேண்டும் என்றால், ஏனையோர் எல்லாம் ஒப்புக்கொள்ளத் தக்கச் சான்றுகள் வேண்டும். அதுவும் செம்மொழி மாநாடு போன்ற தீவிரமான மொழியியலாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் பங்கேற்கும் ஒரு நிகழ்வில் பேசுகையில், ஆய்வு தொடர்ந்துகொண்டிருக்கிற - இதுவரை தீர்க்கமாக நிரூபிக்கப்படாத ஒரு விஷயத்தில் தீர்க்கமாக முடிவை அறிவிப்பதுபோல் பேசுவது முறையானதாகாது.
உலகின் ஆதிமொழிகுறித்த ஆய்வானது, உலகில் தொல்லியல் ஆய்வுகள் தொடங்கிய காலந்தொட்டு நடந்துவரும் ஓர் ஆய்வாகும். அங்கொன்றும் இங்கொன்றுமாக, அவ்வப்போது உலகின் ஏதாவது ஒரு மூலையிலிருந்து ஓர் ஆய்வாளர் உலகின் ஆதிமொழிக் கூறுகள் இந்த மொழி வழக்கில் காணப்படுகின்றன என்று கூறுவதும் அடுத்த சில மாதங்களிலேயே அந்தக் கூற்று நிராகரிக்கப்படுவதும் காலங்காலமாகத் தொடரும் கதை. அண்மையில்கூட ஆப்பிரிக்காவில் பேசப்படும் சுவாகிலி மொழியில் உலக மொழிகளின் வேர்ச்சொற்கள் காணப்படுவதாக ஒரு கூற்று உருவாக்கம் பெற்றது. ஆனால், எதையும் அறிவியல்பூர்மான வரலாற்றின் மூலமாக மட்டுமே அணுகும் தீவிரமான ஆராய்ச்சியாளர்கள், "ஆதிமொழி என்று ஒரு மொழியைக் குறிப்பிடலாகாது; அப்படி வரையறுப்பது இயலாத காரியமாக இருக்கிறது'' என்றே பொதுவாகக் கூறுகிறார்கள்.
இந்நிலையில், தமிழில் "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி'' என்ற கூற்றை நிரூபிப்பதற்கான ஆய்வுகள் பல ஆண்டு காலமாகவே தொடர்கின்றன. ஆனால், இதை நிறுவ வரலாற்றுக் காலம் தொடங்கி இப்போது வரை அறுதியான - சந்தேகத்துக்கு இடமளிக்காத வகையிலான - குறைந்தபட்சம் தமிழறிஞர்கள் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளத் தக்க வகையிலான சான்றுகள் நமக்கு கிடைக்கவில்லை (மாநாட்டில் முதல்வர் தமிழின் தொன்மையைக் குறிப்பிடுகையில், சிந்து சமவெளிக் குறியீடுகளைப் பழந்தமிழ் எழுத்துகளோடு ஒப்பிட்டு, அறிஞர் அஸ்கோ பர்ப்போலாவின் ஆய்வைச் சுட்டிக்காட்டிப் பேசினார். ஆனால், பர்ப்போலா தன் உரையின்போது, "வடக்கின் குறிப்பிடத் தகுந்த மக்களும் ஹரப்பா வழிவந்தவர்கள். ஒரே நாகரிகத்தின் பாரம்பரியத்தை அவர்கள் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள்'' என்று குறிப்பிட்டது இங்கு குறிப்பிடத் தகுந்ததாகும். சிந்து சமவெளி நாகரிகத்தின் காலத்தைவிடவும் மெசமடோமிய, எகிப்திய, சீன நாகரிகங்கள் பல ஆயிரம் ஆண்டுகள் முற்பட்டவை என்பது வேறு விஷயம்).
எனினும், தமிழர்களாகிய நமக்கு இயல்பாகவே பழைமை மீதும் வரலாற்றைவிடவும் புனைவுகள் மீதும் அதிக ஈடுபாடு உண்டு என்பதால், நம் முன்னோரின் காலத்தையும் அவர்தம் படைப்புகளின் காலத்தையும் முன்கூட்டிச் சொல்லும் ஆய்வாளர்களே நம் சமூகத்தில் செல்வாக்கு பெற்றவர்களாக இருந்திருக்கின்றனர். மாறாக, எதிர்க்கருத்தைக் கூறியவர்கள் - அவர்கள் எத்தனை மிகச் சிறந்த தமிழறிஞர்களாக, ஆய்வாளர்களாக இருப்பினும் - பொருட்படுத்தத் தகாதவர்களாக, இன விரோதிகளாக, தமிழ்த் துரோகிகளாகவே கட்டமைக்கப்பட்டிருக்கின்றனர் (மிகச் சிறந்த இரு உதாரணங்கள்: கொண்டாடப்பட்டதற்கு தேவநேயப் பாவணரும் தூற்றப்பட்டதற்கு வையாபுரிப் பிள்ளையும்).
ஆக, தமிழின் மூலத்தை அறிந்துகொள்வதற்கான ஆய்வு தொடர்கிறது... தொடரும்... நாம் என்ன பேசினாலும் பிரகடனப்படுத்தினாலும் எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் வலுவான வரலாற்றுச் சான்றுகளே அதன் உண்மையான வயதையும் தமிழின் மூலத்தையும் பறைசாற்றும். ஆக, இப்போது தமிழ் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்னையும் அதற்குத் தேவைப்படும் அக்கறையும் எதுவென்றால், அதன் பழைமை மற்றும் அதுகுறித்த பெருமிதம் சார்ந்தது இல்லை. மாறாக, சமகாலத்தில் குறைந்துகொண்டிருக்கும் அதன் பயன்பாடு மற்றும் எதிர்கால பயன்பாட்டுக்கேற்ற தகவமைப்பு சார்ந்தது.
உலகில் பெரிய இலக்கிய வளங்கள் இல்லாத சாதாரண மொழிகளைப் பேசும் பல சமூகங்களில், இன்றைக்கு அவரவர் மொழியில் பள்ளிப் படிப்பில் தொடங்கி மருத்துவப் படிப்பு வரை அனைத்தும் சாத்தியம். தாய்மொழி மட்டுமே தெரிந்த ஒருவனுக்கு அனைத்து அங்கீகாரங்களும் சாத்தியம். நாளையத் தொழில்நுட்பத்தை எதிர்கொள்வதற்கான வார்த்தைகள் இன்றைக்கே சாத்தியம். ஆனால், தமிழின் நிலை என்ன? இன்றைய தமிழர்களின் அன்றாடப் பயன்பாட்டில் தமிழுக்கான இடம் என்ன? அப்படிப் பயன்பாட்டில் உள்ள தமிழின் தரம் என்ன? குறைந்தபட்சம் மொழியைத் தொழில் கருவியாகப் பயன்படுத்துவோரிடமாவது தமிழ் தரமாக இருக்கிறதா? நாளைய தொழில்நுட்பத்துக்கு நம்மையும் தமிழையும் எந்த அளவுக்குத் தயாராக்கிக்கொண்டிருக்கிறோம்? அப்படித் தயாராக்கிக்கொண்டிருக்கிறோமெனில், தயாராக்கிக்கொண்டிருக்கும் தமிழுக்கும் நமக்குமான தொடர்பு எந்த அளவுக்கு இருக்கிறது? உலகமயமாதல் என்னும் பெரும் சூழல் ஏற்படுத்தக்கூடிய தொடர் மாற்றங்களுக்கு நாமும் தமிழும் எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறோம்? தமிழை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லவிருக்கும் அடுத்தத் தலைமுறையை நாம் எந்த அளவுக்குத் தயார்படுத்திவருகிறோம்? அடுத்தத் தலைமுறைக்கு தமிழ் மீது எந்த அளவுக்கு மதிப்பும் நம்பிக்கையும் இருக்கிறது?
இன்றைக்குத் தமிழ் பேசிக்கொண்டிருக்கும் 99 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஐந்து வரிகள் சேர்ந்தாற்போல தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாதவர்கள் (ஒரு பத்து பேரை எழுதச் சொல்லிப் பாருங்களேன்). இதுதான் யதார்த்தம். இதுதான் நிதர்சனம். இதுதான் இன்று தமிழும் தமிழரும் எதிர்நோக்கியிருக்கும் மிக முக்கியமான பிரச்னை, நெருக்கடி, ஆபத்து எல்லாமும். செம்மொழி மாநாடு போன்ற நிகழ்வுகளில் நாம் முன்னுரிமை அளிக்க வேண்டியதும் நாம் தீர்வு காண வேண்டியதும் இத்தகைய பிரச்னைகள், நெருக்கடிகள், ஆபத்துகளுக்குத்தான். ஆனால், சமகால பிரச்னைகளுக்கும் யதார்த்தத்துக்கும் முக்கியத்துவம் அளிக்காமல், மீமெய்யியலிலும் பழம்பெருமையிலும் தோயும் மனோபாவமே நம்முடைய பொது மனோபாவமாகிவிட்டது. முதல்வரின் கூற்று வெளிப்படுத்துவதும் இதைத்தான்.
தமிழ் ஆதிமொழியாவது நம் கையில் இல்லை. அதனால், தமிழுக்கோ, தமிழர்க்கோ பெரிய பயனும் ஏதுமில்லை. ஆனால், தமிழ் அழியாமொழியாக வேண்டும். தமிழின் அழிவு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அது நம் கையில் மட்டுமே இருக்கிறது. நம் ஒவ்வொருவரின் கையிலும்... முதல்வரில் தொடங்கி..!
குறிப்பு: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போது எழுதிய கட்டுரை.
Labels: கட்டுரைகள்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home