28.4.10

ஓர் அதிகாரமும் ஒவ்வோர் அதிகாரமும்

      "தேசம் தற்கொலை செய்துகொள்வதுபோல் இருக்கிறது''-முஷாரப் சொன்னது. யாரிடமிருந்து எப்படியொரு வாக்கியம்! வரலாற்று முரண் என்பது இதுதான் போலும். ஆனால், பாகிஸ்தானின் இன்றைய நிலையை அப்படியே சொல்லிவிட இந்த வாக்கியத்தைவிடவும் பொருத்தமான வாக்கியம் வேறு எதுவும் இருக்க முடியாது.

      பேநசீர் கொல்லப்பட்ட செய்தியறிந்து உலகே அதிர்ச்சி அடைந்தபோதும் ராவல்பிண்டியின் பழைய ஆட்களுக்கு மட்டும் அது வேறு சில நினைவுகளையும் கொண்டுவந்திருக்கக்கூடும். பேநசீர் பங்கேற்ற கடைசி பேரணி நடைபெற்ற லியாகத் பாக்கில்தான் 1951-ல் பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலிகான் சுட்டுக் கொல்லப்பட்டார். லியாகத் அலிகான் மரணத்துக்கும் பேநசீர் மரணத்துக்கும் இடையே உள்ள இந்த 56 ஆண்டுகளில் அங்கு எத்தனையோ அரசியல் படுகொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. கொலை செய்யப்பட்டவர்கள் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்ற போதிலும் கொலைக்கான காரணம் மட்டும் ஒன்றுதான். அது-அதிகாரத்தைக் கைப்பற்றுவது.
        உலகில் எல்லா நாடுகளும் அதிகாரப் போரால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அதிகாரப் போர் என்பது வரலாற்றுத் தொடர் நிகழ்வாகி ஒரு நாட்டையே சீரழிக்கும் துயரம் பாகிஸ்தானுக்கு மட்டுமே சபிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் எப்போதும் நான்கு அதிகார மையங்கள்: அரசு, ராணுவம், மத அடிப்படைவாத அமைப்புகள், அமெரிக்கா. இந்த நான்கு மையங்களுக்கு இடையே நடக்கும் சதுரங்கப் போட்டிதான் பாகிஸ்தான் அரசியல்.
       பாகிஸ்தானின் வரலாறு நெடுக அதிகாரப் போட்டி எப்படி தொடர்கிறதோ அதேபோல் நல்ல தலைவருக்கான தேவையும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
அந்தத் தேவைதான் நவாஸ் ஷரீப் பதவி நீக்கம் செய்யப்பட்டபோது சர்வாதிகாரி முஷாரப்பை வரவேற்கச் செய்தது; பதவி நீக்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இப்திகார் சௌத்ரிக்கு ஆதரவாக லட்சக் கணக்கானோரை திரள வைத்தது; முஷாரப்பின் எதேச்சதிகாரம் எல்லை மீறியபோது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேநசீரையும் நவாஸ் ஷரீப்பையும் நாடு திரும்ப வைத்தது; இப்போது பேநசீருக்குப் பிறகு 'திருவாளர் 10 சதத் தரகு' சர்தாரியை அந்நாட்டின் புதிய நம்பிக்கையாக பார்க்க வைத்துள்ளது.
       உள்ளபடியே பாகிஸ்தானியர்களின் தேவைகள் அதிகம். முக்கியத் தொழிலான வேளாண்மை புறக்கணிக்கப்பட்டிருப்பதால் கிராமப்புறங்களில் வாழும் 68.5 சதவீத மக்கள் மோசமான எதிர்காலத்தை எதிர்நோக்கி இருக்கின்றனர். எல்லைப்புற மாகாணங்களை வளர்ச்சித் திட்டங்கள் சென்றடையவில்லை. வேலைவாய்ப்பின்மை இளைஞர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கி இருக்கிறது. நாட்டின் 28.3 சதவீதத்தினர் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். 44 சதவீதத்தினருக்கு அடிப்படை கல்விக்கூட அளிக்கப்படவில்லை. 12 லட்சம் குழந்தைகள் தெருவில் நிராதரவாக நிற்கின்றனர். பொருளாதாரம் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அந்நாட்டின் வெளிநாட்டுக் கடன் உயர்ந்திருக்கிறது. நிகழ் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் மட்டும் அந்நாடு பெற்றிருக்கும் வெளிநாட்டுக் கடன் ரூ. 1.6 லட்சம் கோடி. நீதித் துறையோ முற்றிலும் முடக்கப்பட்டிருக்கிறது.
      பயங்கரவாத இயக்கங்களுடன் உள்ள உறவை பாகிஸ்தான் ஒருபோதும் ஒப்புக்கொண்டதில்லை. ஆனால், இப்போதுள்ள நிலைமையே வேறு. பாகிஸ்தான் அரசுக்கே எதிராக திரும்பியுள்ள பயங்கரவாதிகள் எல்லைப்புற மாகாணங்களைத் தம் வசப்படுத்திவருகின்றனர். ஸ்வாத், ஷாங்லா மாவட்டங்கள் அவர்களுடைய முழுக் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. வஜிரிஸ்தானில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். தார்பலாவிலும் சர்கோதாவிலும் ராணுவத் தளங்கள் சூறையாடப்பட்டன. மிராலியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் சிறைப் பிடிக்கப்பட்டனர்.
      இது ஒருபுறமிருக்க, பாகிஸ்தான் ராணுவத்தினரிடையே மௌனப் பிளவு உருவாகிவருகிறது. மிராலியில் சரணடைந்த  நூற்றுக்கணக்கான வீரர்கள் பயங்கரவாத இயக்கத்தினருடன் ஐக்கியமாகி இருக்கலாம் என்று அரசே சந்தேகிக்கிறது. தீவிரவாதிகளுடன் போரிட மறுத்த 400 வீரர்கள் மீது ராணுவ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. கராச்சியை எந்நேரமும் பயங்கரவாதிகள் கைப்பற்றலாம் என்று அந்நாட்டு உளவுத் துறை அரசுக்குத் தொடர்ந்து எச்சரிக்கைகளை அனுப்பிவருகிறது.
         கடந்த ஆண்டில் மட்டும் அந்நாடு 50-க்கும் மேற்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதல் உள்பட 160-க்கும் அதிகமான பயங்கரவாதத் தாக்குதல்களைச் சந்தித்திருக்கிறது. இத்தாக்குதல்களில் 800}க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்; 2000 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். எங்கே, எப்போது, என்ன நிகழும் என்று தெரியாத அபாயச் சூழல் ஒவ்வொருவர் மீதும் கவிந்திருக்கிறது.
      ஆனால், பாகிஸ்தானிய தலைவர்களுக்கோ பதவியைக் கைப்பற்றவும் அதைக் காப்பாற்றிக்கொள்ளவுமே நேரம் போதவில்லை. அரசியல்வாதிகள் ஆட்சியா, ராணுவத்தின் ஆட்சியா?; பிரதமர் அதிகாரமிக்கவரா, அதிபர் அதிகாரமிக்கவரா? என்ற கேள்விகள் அந்நாட்டின் வரலாறு முழுவதும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. வரலாற்றின் முக்கியமான ஒரு தருணத்தில் இருப்பதை பாகிஸ்தான் மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், பாவம். அவர்களை வழிநடத்த யாருமேயில்லை.
முக்கியமான இக்காலகட்டத்திலும்கூட அரசியல் கட்சிகள் பிளவுபட்டே நிற்கின்றன. உண்மையான போராட்டத்தில் அவர்களுக்கு நாட்டமில்லை. சொல்லப்போனால், முஷாரப்புடன் சமரசம் செய்துகொண்டு அதிகாரத்தைப் பங்கிட்டுக்கொள்வதில் எந்தக் கட்சிக்கும் தயக்கமில்லை. முஷாரப், நவாஸ், சர்தாரி, ரஹ்மான், இம்ரான் என்று ஒவ்வொருவரிடமும் ஒரு திட்டம் இருக்கிறது. ஆனால், அதன் சாரம்சம் என்னவோ அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக மட்டுமே இருக்கிறது. நாட்டின் மோசமான நிலையை மாற்ற எவரொருவரிடமும் திட்டம் இல்லை.
      அடுத்த சில மாதங்களில் அங்கு ஒரு தேர்தல் நடக்கலாம்; ஆட்சியை அமெரிக்காவின் மற்றொரு கைப்பாவை கைப்பற்றலாம். ஆட்சி மாற்றம் என்பது அதிகாரத்தைக் கையாள்பவரின் மாற்றாக மட்டுடுமே இருக்கும்பட்சத்தில் மற்றொரு உள்நாட்டுப் போரை அந்நாடு எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை!
2007 தினமணி 

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home