போராட்டமா; யாரங்கே?
மது, மது வகைகள், மதுப் பழக்கம், மது விற்பனை, மதுவிலக்கு இவற்றையெல்லாம்பற்றி நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உண்டு. தமிழகத்தில் மதுவிலக்கை அமலாக்க வேண்டும் என்று ஒரு சாரார் வலியுறுத்திவருகின்றனர். மதுவிலக்கு தேவையில்லை; ஆனால், உள்நாட்டு மது வகைகளுக்கும் - குறிப்பாக கள்ளுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்று இன்னொரு சாரார் வலியுறுத்திவருகின்றனர். ஆனால், தமிழக அரசோ இந்த விஷயத்தில் ஒரு வினோதமான கொள்கையைப் பின்பற்றிவருகிறது.
தமிழகத்தின் ஒட்டுமொத்த மது வியாபாரத்தையும் 'டாஸ்மாக்' மூலம் தானே முன்னின்று நடத்தும் அரசு, இந்தியாவில் தயாரிக்கப்படும் 'வெளிநாட்டு மது வகை'களை (ஐ.எம்.எஃப்.எல்.) மட்டும் தன் கடைகளில் விற்கிறது (இப்படி விற்கப்படும் மது வகைகள் பெயரில் மட்டுமே வெளிநாட்டைத் தாங்கிக்கொண்டிருப்பவை என்பதும் அங்குள்ள மது தயாரிப்பு - தரத்துக்கும் இங்குள்ள மது தயாரிப்பு - தரத்துக்கும் சம்பந்தமே கிடையாது என்பதும் வேறு விஷயம்).
ஆக, நாம் விரும்புகிறோமோ, இல்லையோ தமிழகத்தில் இன்றைக்கு ஏறத்தாழ ரூ. 1 லட்சம் கோடி புரளும் தொழிலாக - மாநிலத்தின் மொத்த வருவாயில் 25 சத வருவாயை - ரூ. 13,500 கோடியை - அளிக்கும் தொழிலாக - ஏறத்தாழ 32,000 பேர் பணியாற்றும் ஒரு தொழிலாக மிகக் குறுகிய காலத்தில் மது விற்பனைத் தொழிலை 'வளர்த்தெடுத்திருக்கிறது' தமிழக அரசு.
இந்நிலையில், இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்களுக்கு ஒரு முதலாளியாக உரிய ஊதியத்தையும் அவர்களுக்குரிய பணி உரிமைகளையும் அரசு அளிக்க வேண்டியது தொழில் தர்மமாகும்.
தமிழக அரசு, தான் நடத்தும் மதுக் கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தற்போது ஊதியமாக - மேற்பார்வையாளர்களுக்கு ரூ. 4,000; விற்பனையாளர்களுக்கு - ரூ. 2,800; உதவியாளர்களுக்கு ரூ.2,100 வழங்குகிறது. இந்த ஊதியத்திற்கு 12 மணி நேரம் அவர்கள் பணியாற்ற வேண்டும். தவிர, 'டாஸ்மாக்' மாவட்ட மேலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கடையும் அளிக்க வேண்டிய ரூ. 1,000 முதல் ரூ. 3,000 வரையிலான கப்பத்தில் தொடங்கி ஆளும் கட்சியினர் அவ்வப்போது நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு அளிக்க வேண்டிய கட்டாய நன்கொடைகள்; காவல் துறையினருக்கு அன்றாடம் செலுத்த வேண்டிய மது போத்தல்களுடன் கூடிய கவனிப்புகள்; லாரிகளிலிருந்து மது போத்தல்களை இறக்கும் சுமைத் தூக்கும் தொழிலாளர்களுக்கு அளிக்கும் போத்தல் கூலி (ஒரு போத்தலுக்கு ரூ. 2) வரையிலான எழுதப்படாத சகல கப்பங்களையும் இந்தப் பணியாளர்களே செலுத்த வேண்டும்.
பணியாளர்கள் நியாயமற்ற இந்த ஊதிய விகிதத்தையும் பணி நேரத்தையும் கப்ப நடைமுறைகளையும் எதிர்க்கின்றனர். இந்தக் குறைவான ஊதியமும் எழுதப்படாத கப்ப நடைமுறைகளும் ஊழலுக்கு வழிவகுப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் தொழிலை முறைகேடாக நடத்தும் நிர்ப்பந்தத்தை அரசே மறைமுகமாக உருவாக்குவதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஆகவே, பணிப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் பணி நிரந்தரம் மற்றும் வார விடுமுறை, ஆண்டு விடுப்பு, ஊக்கத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆகஸ்ட் 11-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
அரசு இந்தப் போராட்டத்தை விரும்பாத பட்சத்தில் பணியாளர்கள் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம். பணி நிரந்தரம் போன்ற அவர்களுடைய கோரிக்கைகளை ஏற்க முடியாத பட்சத்தில், பணிப் பாதுகாப்பு அளிக்கக்கூடிய மாற்று ஏற்பாடுகளை முன்வைத்திருக்கலாம். இதுதான் அரச நீதிக்கு இலக்கணம்.
ஆனால், தமிழக அரசோ மதுக்கடைப் பணியாளர்கள் போராட்டத்தை சர்வாதிகாரத்தையும் அடக்குமுறையையும் கையாண்டு கோழைத்தனமாக எதிர்கொள்கிறது.
இந்தப் போராட்ட அறிவிப்பு வெளியான அடுத்த சில நாள்களிலேயே, "மதுக் கடைப் பணியாளர்கள் பிரச்னைக்கும் மதுவிலக்கு பிரச்னைக்கும் விரைவில் தீர்வு காணப்படும்'' என்று பணியாளர்களுக்கு மறைமுக மிரட்டல் விடுத்தார் முதல்வர் மு. கருணாநிதி.
இதையடுத்து, பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் மிரட்டப்பட்டனர். தொடர்ந்து, "போராட்டத்தில் ஈடுபடுவோர் பணிநீக்கம் செய்யப்பட்டு, புதிதாக ஆளெடுக்கப்படுவர்'' என்று 'டாஸ்மாக்' நிர்வாகம் மூலமாகவும் மாவட்ட நிர்வாகங்கள் மூலமாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டது. பிறகு, "போராட்ட நாளில் ஒவ்வொரு மதுக்கடையும் காவல் துறையால் முழுமையாகக் கண்காணிக்கப்படும்'' என்று அறிவிக்கப்பட்டது. இறுதியாக, 'போராட்டத்தில் ஈடுபட மாட்டோம்' என்று எழுதி வாங்கிக்கொண்டு, கடை சாவியையும் பணியாளர்களிடமிருந்து பறித்திருக்கிறது அரசு.
இது அநீதியானது. அறம் சாராத ஒரு தொழிலில் ஈடுப்பட்டிருப்பதாலேயே அறநெறிகளைப் புறக்கணித்துவிட்டு அரசு செயல்பட முடியாது.
இந்தப் பிரச்னையில் மட்டுமல்ல; எந்தப் பிரச்னையை முன்னிறுத்திப் போராடுபவர்களையும் ஜனநாயகத்துக்கு விரோதமான வகையில் எதிர்கொள்வதையே இந்த அரசு வழக்கமாகக் கொண்டிருக்கிறது.
தமிழின வரலாற்றிலேயே மிக முக்கியான ஈழத் தமிழர் பிரச்னையை முன்னிறுத்திப் போராடியவர்களை இந்த அரசு எப்படி எதிர்கொண்டது? 50-க்கும் மேற்பட்டோர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞர்கள் கலவரத்தை எதிர்கொண்டனர். வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட வேலைக்கு உரிய கூலி கேட்ட விழுப்புரம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் காவல் துறையினரின் துப்பாக்கிச்சூட்டை எதிர்கொண்டனர். மின்வெட்டுப் பிரச்னையை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் பொன்னமராவதியிலும் ராஜகிரியிலும் காவல் துறையினரின் தடியடிக்கு ஆளாயினர்; ஆலங்குடி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்றைக்கும் வழக்குகளைச் சுமந்துகொண்டிருக்கின்றனர். வடசேரியில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சருக்குச் சொந்தமான எரிசாராய ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் காவல் துறையினரின் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சையில் இருக்கின்றனர்.
ஆக, தனக்கு எதிராகப் போராடுவோர் எவரையும் நேர்மையற்ற வகையிலேயே எதிர்கொள்கிறது இந்த அரசு.
ஓர் அரசு தன் கடமைகளிலிருந்து தவறும்போது - தவறான பாதையைத் தேர்ந்தெடுக்கும்போது - தவறிழைக்கும்போது, அதனால் பாதிக்கப்படுபவர்கள் தங்களுடைய வலியை - வேதனையை - கோபத்தை - எதிர்ப்பை அரசுக்கும் பிறருக்கும் வெளிப்படுத்த ஜனநாயகம் அளித்திருக்கும் சின்ன உரிமை போராட்டம். அந்த உரிமையும்கூட அரசால் நசுக்கப்படும் என்றால், அந்த அரசு எப்படித் தன்னை ஜனநாயக அரசு என்று கூறிக்கொள்ள முடியும்? ஜனநாயக அடிப்படையிலான எல்லாப் போராட்டப் பாதைகளையும் அரசே அடைத்துவிட்டால் மக்கள் வேறு பாதையைத் தேர்ந்தெடுப்பதை எப்படித் தடுக்க முடியும்?
ஆகஸ்ட் 2010 தினமணி

Labels: கட்டுரைகள்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home