4.12.10

மன்னார்குடி ஏன் இப்படி ஆனது?

     மன்னார்குடி ஓர் அற்புதமான நகரம். இந்தியாவின் மிக நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்ட நகரங்களில் ஒன்று அது. ஒரு காலத்தில் சுமார் 6 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட நகரமாக அது இருந்தபோது, அந்தச் சின்ன நகரத்தில் நாட்டின் பெரிய குளங்களில் ஒன்றான 'ஹரித்ராநதி' உள்பட சிறிதும் பெரிதுமாக 98 குளங்கள் இருந்தன. இவை யாவும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருந்தன. வடுவூர் ஏரியிலிருந்து ஏறத்தாழ 15 கி.மீ. நீளம், 100 அடி அகலத்தில் வாய்க்கால் அமைக்கப்பட்டு அதன் வழியே தண்ணீர் கொண்டுவரப்பட்டு இந்தக் குளங்கள் நிரப்பப்பட்டன.
   காவிரியின் கிளைநதியான பாமணி அரவணைத்திருக்க, மிகக் கச்சிதமாக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி அமைக்கப்பட்ட தெருக்களும் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி அமைக்கப்பட்ட வீதிகளும் சொல்லொண்ணா அழகை அந்த நகருக்குத் தந்தன. ஆங்கிலேயர்கள் அந்த நகரின் அழகை உணர்ந்திருந்தார்கள். 1866-ம் ஆண்டிலேயே மன்னார்குடியை நிர்வகிக்க நகர சபையை உருவாக்கினார்கள் அவர்கள்.    ஆனால், இந்த விஷயங்கள் எல்லாம் இப்போது ஒரு கொடுங்கனவுக்கு முந்தைய இரவு நேர நினைவுகள் ஆகிவிட்டன. மன்னார்குடி இப்போது அழிந்துகொண்டிருக்கிற ஒரு நகரம். ஆமாம். அது வளரும் நகரமாகிவிட்டது. இருநூறுக்கும் மேற்பட்ட தெருக்களுடன் 12 சதுர கிலோ மீட்டருக்கு விரிவடைந்துவிட்ட அந்த நகரிலுள்ள குளங்களின் எண்ணிக்கை இப்போது 17 ஆகிவிட்டது. குப்பைகளையும் கழிவுகளையும் சுமக்கும் கழிவோடைகள் ஆகிவிட்டன குளங்கள். அவற்றுக்கு நீர் வந்த வாய்க்கால் முற்றிலுமாக ஆக்கிரமிக்கப்பட்டு அடையாளமற்று போய்விட்டது.
    நகரின் மையப் பகுதியான பந்தலடி ஒரு சின்ன மழையைக்கூட எதிர்கொள்ளும் திராணியற்று கண நேரத்தில் மிகப் பெரிய சாக்கடையாக மாறிவிடுகிறது. மழை பெய்தால் மன்னார்குடி மிதக்கிறது.
   ஒரு காலத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த குப்பைக்கிடங்கு நகரம் விரிவடைந்ததும் இப்போது நகரின் பிரதான பகுதிக்குள் வந்துவிட்டது. ஒவ்வொரு நாளும் மன்னார்குடி நகரிலுள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளிலிருந்து 125 குப்பைத் தொட்டிகள் மூலம் சேகரிக்கப்படும் - 17 கி.மீ. நீள சாக்கடைகளிலிருந்து வாரப்படும் - வீட்டுக்குப்பைகள், காய்கறிக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், மின்னணுக் கழிவுகள், இறந்த உயிரினங்கள் யாவும் லாரிகளில் கொண்டுவரப்பட்டு டன்டன்னாக இங்கு கொட்டப்படுகின்றன. வெயிலில் அவை தீப்பிடித்து எரிகின்றன. மழையில் அவை ஊறி முடை நாற்றம் எடுக்கின்றன. பனிக்கால இரவுகளில் எரியூட்டப்படும்போது புறப்படும் நச்சுமிக்க புகையும் நெடியும் நகர மக்களின் நாசியை ஊடுருவுகின்றன.
    ஆனால், மன்னார்குடி மக்கள் இவை எல்லாவற்றையும் பழக்கிக்கொண்டிருக்கிறார்கள். மிக சமீபத்தில்கூட அந்தக் குப்பைக் கிடங்குக்கு மிக அருகில் ஒரு நகர் உருவாகி இருக்கிறது. சுற்றிலும் வீடுகள் புதிதாகக் கட்டப்பட்டிருக்கின்றன. இருமிக்கொண்டே வேலையைத் தொடர்கின்றனர் மக்கள். ஒரு பெரிய சுவாச நோயாளியைப்போல காட்சி அளிக்கிறது மன்னார்குடி.
   மன்னார்குடி ஏன் இப்படி ஆனது?
   உண்மையில் மன்னார்குடி இன்று எதிர்கொள்ளும் பிரச்னைகள் யாவும் அதன் தனிப்பட்ட பிரச்னைகள் அல்ல. இந்திய நகரங்கள் ஒவ்வொன்றும் எதிர்கொள்ளும் அல்லது எதிர்கொள்ளவிருக்கும் பிரச்னைகள். நகர்மயமாதலுக்கு இந்தியா கொடுக்கும் விலையே மன்னார்குடியில் காணக் கிடைக்கும் காட்சிகள்.
    இன்றைக்கு இந்தியாவின் 30 சத மக்கள் நகரங்களில் வசிக்கிறார்கள். அடுத்த 25 ஆண்டுகளில் இது 75 சதமாக மாறும். நகர்மயமாதலை இவ்வளவு துரிதப்படுத்திக்கொண்டிருக்கும் இந்தியா, மறுபுறம் அதன் விளைவுகளை எதிர்கொள்ள எந்த அளவுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது?
   நகர்மயமாதல் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால் நீர்நிலைகள் பராமரிப்பு மற்றும் கழிவுகள் மேலாண்மை. அடிப்படை குப்பைப் பிரச்னைதான். உலக நாடுகள் அனைத்துமே இந்தப் பிரச்னையை எதிர்கொள்கின்றன.
   குப்பைகளின் தேசமான அமெரிக்கா கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக குப்பைகளைக் கையாளப் போராடிக்கொண்டிருக்கிறது. அமெரிக்கர்கள் குப்பைகளை முதலில் விவசாயிகளிடத்தில் ஒப்படைத்தார்கள். ரசாயன உரத்தின் வருகைக்குப் பிறகு விவசாயிகளுக்கும் குப்பை தேவையற்றதானது. பிறகு, திறந்தவெளிகளில் அமைக்கப்பட்ட சின்ன குழிகளில் கொட்டினார்கள். அது துர்நாற்றத்தை ஏற்படுத்தியது. பிறகு, நீர்நிலைகளில் கொட்டினார்கள். அது நீர்நிலைகளை மாசுபடுத்தியது. பிறகு, எரியகங்களில் எரித்தார்கள். அது காற்றை புகையாக்கியது. பிறகு, மிகப் பெரிய புதைகுழிகளை அமைத்து புதைத்தார்கள். அது நிலத்தடி நீரை நச்சுநீராக்கியது. இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் தரம் பிரித்து, மறுசுழற்சிக்குள்ளாக்கி, பாதியை எரித்து, பாதியைப் புதைத்து, மீதியை மூன்றாம் உலக நாடுகளின் தலையில் சுமத்திக்கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பியர்களின் நிலையும் இதுதான்.
   இந்தியா எப்படி எதிர்கொள்கிறது? பிற நாடுகள் எல்லாம் தேசிய அளவில் தீர்வு தேடும் ஒரு பிரச்னைக்கு உள்ளாட்சி நிர்வாகங்கள் அளவில் தீர்வு தேடிக்கொண்டிருக்கிறது இந்தியா. ஆனால், இந்தப் பிரச்னையை அதன் முழு தீவிரத்தோடு பார்க்கும் திராணியாவது உண்டா இந்திய உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு?
   வளர்ந்த நாடுகள் உணர்ந்துகொள்ளாத ஓர் உண்மை உண்டு: குப்பைப் பிரச்னையை வெறும் கையாளும் திறனை மட்டும் கொண்டு எதிர்கொண்டுவிட முடியாது. மனித வாழ்முறையோடு பிணைந்திருக்கும் ஒரு பிரச்னை அது.
    மனித குலத்துக்கு குப்பைகள் எப்போது பிரச்னையாக மாறின? ரசாயன உரங்களின் வருகைக்குப் பிறகு; நுகர்வு வெறியின் உச்சத்தில் பயன்படுத்தித் தூக்கியெறியும் கலாசாரத்துக்கு மனிதர்கள் மாறிய பிறகு.
   வரலாற்றிலிருந்துதான் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
  இந்தியா இன்னமும் ஒரு விவசாய நாடுதான். அதன் பாரம்பரிய வாழ்முறையிலேயே மறுசுழற்சியும் மறுபயன்பாடும் பிணைந்திருக்கிறது. கொஞ்சம் பின்னோக்கினால், முடை நாற்றமும் நச்சுத்தன்மையுமிக்க குப்பைகள் மத்தியிலான வாழ்க்கையை நவீன இந்தியாவால் தவிர்க்க முடியும். இல்லாவிடில், மன்னார்குடி போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நகரவாசிகளிடமிருந்து குப்பைகளுக்கு அருகில் வீடு கட்டி வசிக்கும் கலையை நவீன இந்தியர்கள் கற்றுக்கொள்ள நேரிடும்!
2010  தினமணி

Labels:

7 Comments:

Blogger Unknown said...

உங்கள் கவலையை நானும் பகிர்ந்துகொள்கிறேன். விழிப்புணர்ச்சி அவசியம் தேவை. நானும் மன்னார்குடி பக்கம்தான். திருச்சிக்கும் பக்கம்தான் :)

December 7, 2010 at 2:24 AM  
Blogger பொன் மாலை பொழுது said...

ஊரையும் நாட்டையும் பற்றி யாருக்கும் கவலை இல்லை.
நம் ஜனங்களுக்கு // நாம் நம் சுகம் மட்டும் // என்ற எண்ணம் ஓங்கி வளர்ந்துவிட்டது.
பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குப்பைகளும் கழிவுகளும்.
இப்போதெல்லாம் சொந்த ஊர் பக்கம் போனாலே வேதனை தான் மிஞ்சுகிறது.

December 7, 2010 at 4:38 AM  
Blogger Prasanna Rajan said...

நல்ல பதிவு நண்பரே. இருப்பினும், குப்பை மேலாண்மை உள்ளாட்சி அமைப்புகளிடம் இருப்பதே நல்லது என்று நினைக்கின்றேன். குப்பை மேலாண்மைக்கு ஒரு மத்திய அமைப்பு அமைக்கபட்டால் அதன் நிர்வாகம் எந்த அளவிற்கு இருக்கும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.

December 7, 2010 at 5:02 AM  
Blogger a said...

mika avasiyamana katturai...... nagaramayamathalala varum pirachinaigalai azhagaka solli irukureergal...

December 7, 2010 at 6:48 AM  
Blogger வடுவூர் குமார் said...

கொடுமை தான், நாம் விழித்துக்கொள்ளும் போது காலம் கடந்திருக்கும்.

December 7, 2010 at 7:29 AM  
Blogger PB Raj said...

நல்ல பதிவு மன்னார்குடியை பற்றி யாரும் இவ்வளவு எழுதியது இல்லை வாழ்த்துகள்...

December 7, 2010 at 11:07 PM  
Blogger Unknown said...

வாழ்த்துகள்...

September 26, 2013 at 2:04 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home