6.10.10

எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!


அது 9.4.1948. ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் 140 கோடி) 'ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான 'சந்திரலேகா' அன்றைய தினம் வெளியானது. தனது நீண்ட கால கனவைக் களமிறக்கி ஓர் இயக்குநராக அறிமுகமானார் எஸ்.எஸ். வாசன். தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் 'சந்திரலேகா' வெளியானது.  இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது 'சந்திரா' என்ற பெயரில், இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை. படத்தை வெளியிட ஒரே போட்டி.

  தஞ்சாவூரில் 'சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர்.தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார். வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: "ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது.எல்லோரும் பிழைக்க வேண்டும் அல்லவா?''
   படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கு தரப்பட வேண்டும் என்று நினைத்தார் வாசன். படத் தயாரிப்புக் குழு மேலாளரிலிருந்து படம் ஓடிய திரையரங்குகளில் டிக்கெட் கிழித்த தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசு அளித்தது 'ஜெமினி ஸ்டுடியோ'.  'சந்திரலேகா' வரலாறானது. தொழில் தர்மத்துக்காக இன்றளவும் வாசன் நினைவுக்கூரப்படுகிறார்!
    ஏறத்தாழ ரூ. 160 கோடி முதலீடு, ஒரே நேரத்தில் 3 மொழிகளில் 2,250 பிரதிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, இதுவரை இந்திய கதாநாயகிகள் யாரும் பெற்றிராத ரூ. 6 கோடி சம்பளத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் மேலாக 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்...  வரலாறுதானா 'சன் பிக்சர்'ஸின் 'எந்திரன்'?
  நிச்சயமாக 'எந்திரன்' ஒரு வரலாறுதான். ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு.
   மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள் (தமிழகத்தில் 650-க்கும் மேற்பட்ட இருக்கைகளைக் கொண்ட திரையரங்குகளே அதிகம்); 4 காட்சிகள் (6 காட்சிகள்கூட திரையிடுகிறார்கள்); டிக்கெட் விலை ரூ. 250 (ரூ. 1,000 வரை விற்கிறது) எனக் கொண்டால்கூட  முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. 'சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான 'கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை 'எந்திரன்' உருவாக்கி இருக்கிறது; வசூலில் சாதனை நிகழ்த்தி 'அமெரிக்க பாக்ஸ் ஆஃபி'ஸில் முதலிடம் பிடித்திருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்?
  ஒரு தொழில் நிறுவனம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இப்படிச் சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நியாயம்தான். தொழில் நிறுவனம்தான், புத்திசாலித்தனமாகத்தான் சம்பாதிக்கிறார்கள்; 'வால்மார்ட்'டுக்கும் 'கோகோ கோலா'வுக்கும் 'ரிலையன்ஸ் ஃப்ர'ஷுக்கும்கூட இந்த நியாயம் பொருந்தும். ஆனால், நாம்  அவர்களை ஆதரிக்கவில்லை. ஏன்? அவர்களை எந்தக் காரணங்கள் எதிர்க்க வைக்கின்றனவோ அதே காரணங்கள்தான் 'எந்திர'னையும் எதிர்க்கவைக்கின்றன.
 சென்னையில் 40-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'எந்திரன்' வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆச்சர்யம் இது இல்லை. தமிழகத்தின் மிக சாதாரண நகரங்களில் ஒன்றான (தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் தங்கிய மாவட்டத்தின் தலைநகரமும்கூட) புதுக்கோட்டையில்கூட 4 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலை. இந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது. இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. 'சன் குழும'மும் ரஜினிகாந்தும் இதைத் சாதனையாகக் கருதலாம். ஆனால், ரசிகர்களைப் பொருத்த அளவில் இது மறைமுகமான கொள்ளை. படம் வந்த சில நாட்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமே பரந்துபட்ட 'எந்திரன்' பட வெளியீட்டுக்கான சூட்சமமாக மாறியிருக்கிறது.
  பொதுவாக, எந்த ஒரு வெற்றித் திரைப்படத்துக்கும் அதிகபட்சம் 10 நாள்களுக்குத்தான் கூடுதல் விலையில் டிக்கெட்டை விற்க முடியும். 100 நாட்கள் ஓடக்கூடிய ஒரு வெற்றிப் படம் ஓர் ஊரில் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டால், முதல் 10 நாட்களில் பார்க்கும் ரசிகர்கள்தான் கூடுதல் கட்டணத்தில் படம் பார்க்க நேரிடும். எஞ்சிய 90 நாட்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் சாதாரண கட்டணத்திலேயே படம் பார்த்துவிடலாம். மாறாக, ஒரு திரையரங்குக்குப் பதில் ஊரிலுள்ள 10 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டால், 100 நாள்களும் படத்தைக் கூடுதல் கட்டணத்திலேயே ஓட்டியதற்கு சமம். இதுதான் 'எந்திரன்' அறிமுகப்படுத்தும் வியாபார சூட்சமம்.  எங்கு பார்த்தாலும் விளம்பரங்கள் மூலமாகவும் செய்திகள் மூலமாகவும் ஒரு பெரும்  மாயையை உருவாக்குதல்.  எல்லோரையும் நம்பவைத்தல். அதன் மூலமாக ஆக்கிரமித்தல். இதுதான் 'எந்திரன்' அறிமுகப்படுத்தும் விளம்பர சூட்சமம்.
 இந்தப் படத்தின் வெளியீட்டையொட்டி, பல படங்கள் திரையரங்குகளைவிட்டு அவசர அவசரமாக விரட்டப்பட்டிருக்கின்றன; பல படங்களின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. ஊரிலுள்ள பெரும்பான்மைத் திரையரங்குகளை 'எந்திரன்' ஆக்கிரமித்திருக்கிறது. 'எந்திரன்' வெளியேறும் வரை வேறு படங்களைத் திரையிட திரையரங்குகள் கிடையாது; மற்ற படத் தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் தொழில் கிடையாது; ரசிகர்களுக்கு வேறு பட வாய்ப்புகள் கிடையாது; எல்லோருமே காத்திருக்க வேண்டியதுதான்.
   இப்படியொரு சூழலை தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும் விநியோகஸ்தர்கள் சங்கமும் எப்படி அனுமதிக்கின்றன? ஏன் கை கட்டி வாய் பொத்தி நிற்கின்றன? இதற்கு காரணம் பயமா அல்லது ஆட்சியாளர்களின் பாத தூளிகளுக்கு சாமரம் வீசியே பழக்கப்பட்ட அடிமைத்தனமா?
அக். 2010 'தினமணி'






Labels:

2 Comments:

Blogger Unknown said...

Excellent article SAMAS but how are we going to counter this? I think the only thing we can do and which is in our means is to spread the word.

October 7, 2010 at 3:50 AM  
Blogger Unknown said...

Excellent samas

October 11, 2010 at 10:25 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home