21.1.11

வெற்றிகரமான பதிப்பாளராவது எப்படி?

   
     சென்னைப் புத்தகக் காட்சி வளாகத்தில் காலையிலிருந்து இரவு வரை ஒரு வாரம் அலைந்தால் தமிழ்ப் பதிப்புத் துறையின் அவ்வளவு தொழில் சூட்சுமங்களையும் தெரிந்துகொண்டு விடலாம் போலிருக்கிறது.
   தமிழ்ப் பதிப்புத் துறையை வெளியிலிருந்து பார்க்கும் ஒருவருக்குக் காணக் கிடைக்கும் பிம்பங்கள் மிகக் கௌரவமானவை. ஆனால், உள்ளே தெரியும் பிம்பங்களோ மிக மோசமானவை. அதேசமயம், பரிதாபத்தை ஏற்படுத்துபவையும்கூட.  தமிழகத்தில் அறிவுசார் தளத்தைக் கட்டமைப்பதில் முக்கிய இடத்தை வகிக்கும் பதிப்புத் துறையில் இன்றைக்கு ஒருவர் வெற்றி பெற வேண்டுமானால் என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா? (எந்த எழுத்தாளரும் எழுதி, எந்தப் பதிப்பாளரும் பதிப்பிக்க வாய்ப்பில்லை என்பதால், பதிப்புத் துறைக்குப் புதிதாக வரும் அப்பாவிகளின் நலன் கருதி இந்த 10 ரகசியங்கள் வெளியிடப்படுகின்றன.)

1. பதிப்பகத்தைத் தொடங்கும்போதே குறைந்தது 50 தலைப்புகளில் புத்தகங்களை வெளியிடத் தக்க வகையில், பாட்டன் - முப்பாட்டன் சொத்தை விற்று தொழிலில் இறங்க வேண்டும் அல்லது யாராவது ஒரு பெரிய கைக்கு பினாமியாகத் தொழிலில் இறங்க வேண்டும்.
2. ஆட்சியாளர்கள், உயர் அதிகாரிகள், நீதிபதிகள் போன்ற அதிகார வர்க்கத்தினரை புத்தகம் எழுத வைத்து போட வேண்டும் அல்லது இவர்கள் கைகளால் புத்தகங்களை வெளியிட வைக்க வேண்டும் (அதிகார வர்க்கத்தினரின் மனைவி,மக்களை வைத்தே சாதித்த வெற்றியாளர்களும் உண்டு).
3. எழுத்தாளரிடமே காசு வாங்கி புத்தகம் போட வேண்டும் அல்லது போட்ட புத்தகங்களை எழுத்தாளர் தலையில் கட்டத் தெரிய வேண்டும்.
4. பதிப்பகத்தில் பணியாற்றும் ஆட்களுக்கு ஆளுக்கொரு வலைப்பூவை உருவாக்கி பதிப்பகப் பிரசாரம் மேற்கொள்ளச் செய்ய வேண்டும் அல்லது ஏற்கெனவே இணையத்தில் வெற்றிகரமாக அக்கப்போர் செய்யத் தெரிந்தவர்களைப் பதிப்பகத்தில் அமர்த்திக்கொள்ள வேண்டும்.
5. இன்றைக்கு நமீதாதான் விற்கும் என்றால், நமீதாவைப் பற்றி புத்தகம் போட வேண்டும்; நாளைக்கு சே குவேரா விற்பார் என்றால், சே குவேராவைப் பற்றி புத்தகம் போட வேண்டும்.
6. எதிர்ப் பதிப்பகங்கள் மீது அவதூறு பரப்ப வேண்டும்; எழுத்தாளர்களைப் பற்றி கிசுகிசு கிளப்ப வேண்டும். பார்ப்போர் எல்லோரிடமும் கொஞ்சமும் வெட்கம் இல்லாமல், "தமிழில் இப்படிப்பட்ட புத்தகங்களை வெளியிட என்னைவிட்டால் ஆள் கிடையாது'' என்று சவால் விட வேண்டும். "நோபல் பரிசு வாங்கிய எழுத்தாளர்கள் எல்லாம் நான் பதிப்பிக்கும் எழுத்தாளரிடம் பிச்சை வாங்க வேண்டும்'' என்று உதார் விட வேண்டும்.
7. மொழி, மண், மரம் என்று எந்தப் பெயரிலாவது உள்நாட்டு, வெளிநாட்டு நல்கைகளைப் பெறத் தெரிய வேண்டும் அல்லது இந்துத்தவம், இஸ்லாமியம், தலித்தியம், ஈழம் என்று எந்த அடையாளத்திலாவது உள்நாட்டு, வெளிநாட்டு நிதியுதவிகளைப் பெறத் தெரிய வேண்டும்.
8. பொது நூலகங்களுக்கான புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவினரை விலைக்கு வாங்க வேண்டும் அல்லது அதிகாரத்தின் பெயரால் அவர்களை வளைக்கத் தெரிய வேண்டும்.
9. தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு ஒரு பதவியைக் கைப்பற்ற வேண்டும். அவரவர் சாதி ஆட்களுடன் சேர்ந்து 'லாபி'யை உருவாக்க வேண்டும் அல்லது ஏற்கெனவே வலுவாக உள்ள 'லாபி'யில் ஒட்டிக்கொள்ள வேண்டும்.
10. சொந்தமாக பத்திரிகை தொடங்கி, நாம் பதிப்பிக்கும் எழுத்தாளர்களையெல்லாம் எழுதவைத்து மாற்றி மாற்றி முதுகு சொறிந்துகொள்ள வேண்டும் அல்லது வெகுஜன பத்திரிகைகளிலுள்ள அதிகாரமிக்க பத்திரிகையாளர்களைப் படைப்பாளிகளாக்கி, அவர்களுக்குப் புத்தகம் வெளியிட்டு வளைத்துப்போட வேண்டும்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home