21.4.10

இந்தக் கல்விமுறை மிகப் பெரிய குற்றம்

          உங்கள் குழந்தைகளுக்கு எல்லாவற்றிலும் உன்னதமானவற்றையே அளிப்பவராக உங்களை நீங்கள் கருதினால் இந்தப் பேட்டியை தயவுசெய்து நீங்கள் தவிர்க்கலாம். ஏனெனில், இத்தகையவர்களேகுழந்தைகளின் உண்மையான சந்தோஷங்களில் எவ்வித முனைப்பும் காட்டாதவர்கள் என்கிறார் ழாக் வெர்ஃபைலே.

         நெதர்லாந்தைச் சேர்ந்த இந்த உளவியல் நிபுணருக்கு வயது 63. ஆனால், குழந்தைகளைப்பற்றி பேசத் தொடங்கினால் ழாக் குழந்தையாகிவிடுகிறார். தனது வாழ்வின் பெரும் பகுதியை பல்வேறு நாடுகளில் பின்பற்றப்படும் கல்விமுறைகள்குறித்த ஆய்விலேயே கழித்தவர் ழாக். "கல்வி முறையின் மூலமாக குழந்தைகளுக்கு எதிராக மிகப் பெரிய குற்றத்தை சப்தமில்லாமல் அரங்கேற்றிவருகிறோம் நாம். சமகாலத்தில் அதிக கவனம் அளிக்க வேண்டிய குழந்தைகளுடைய பிரச்னைகளில் இதுவே பிரதானமானது'' எனக் குறிப்பிடும் ழாக்கின் கருத்துகள் நம் தமிழ்ச் சமூகத்துக்கு மிக முக்கியமானவையாக அமையக்கூடும்.
        
     குழந்தைகளுடைய பிரச்னைகளில் கல்விமுறைதான் மிகக் கவனம் செலுத்த வேண்டியது என்று எப்படி கூறுகிறீர்கள்?
       "ஏனெனில் ஒரு மனிதனின் வாழ்வு, எதிர்காலம் அனைத்தும் அவன் பெற்றுள்ள அறிவாலேயே தீர்மானிக்கப்படுகிறது. அறிவின் வளர்ச்சி மரபியல், சூழலியலுடன் தொடர்புடையது என்றாலும் அதைக் கட்டடமைக்கும் முக்கியக் கருவியாகக் கல்வியே அமைகிறது. ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் சமூகத்தைப் பாதிக்கும் என்பதால் அதைத் தீர்மானிக்கும் கல்விமுறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டியுள்ளது.''

     தமிழகக் கல்விமுறையை நீங்கள் எவ்வாறு உள்வாங்கியிருக்கிறீர்கள்?
     "பிரச்னை ஒன்றுதான். காரணிகளே இடத்துக்கு இடம் மாறுபடுகின்றன. தமிழகக் கல்விமுறையில் உள்ள பெரிய சிக்கல் மொழி சார்ந்ததாகும்.
கற்றலின் அடிப்படையை மொழியே தீர்மானிக்கிறது. இதில் ஏற்படும் பிரச்னை பல்வேறு வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
பார்ப்பவை, கேட்பவை மூலலமாகவே குழந்தைகள் தொடர்புபடுத்திக்கொள்ள பழகுகின்றன. அதனால், திடீரென அறிமுகமற்ற வடிவங்களில் அளிக்கப்படும் மொழியை அவர்களால் எளிதாக புரிந்துகொள்ள முடிவதில்லை.
முதலில் வரன்படுத்தாத தாய்மொழி அறிமுகம், பின்னர் முறைப்படுத்தப்பட்ட தாய்மொழிவழிக்கல்வி, அதையடுத்து இரண்டாவது மொழி அறிமுகம், தொடர்ந்து மூன்றாவது மொழி அறிமுகம் எனப் படிப்படியாகத் தொடரப்படும் கல்விமுறையே குழந்தைகளுக்கு எளிமையானதாக இருக்கும்.
மாறாக ஒரே தருணத்தில் அளிக்கப்படும் வெவ்வேறு மொழிகளின் அறிமுகங்களால் குழந்தைகள் திகைத்துப்போகின்றனர். நினைவாற்றல் துணையிலான ஒரு மோசமான பதிவுமுறைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர். இந்தப் பதிவுமுறையை அடிப்படையாகக்கொண்டே தேர்வுமுறை இருப்பதால் அவர்கள் தங்கள் இயல்பை இழக்கின்றனர்.
        இத்தகைய கல்விமுறையும் தேர்வுமுறையும் ஒரு குழந்தையின் முழுத் திறனை ஒருபோதும் வெளிக்கொணர முடியாது. இதன் காரணமாக படிப்பில் பின்தங்குபவர்களைப் புத்திக்கூர்மை குறைந்தவர்களாகப் பார்க்கும் அணுகுமுறை இங்கு நிலவுகிறது. ஆனால், இது புத்திக்கூர்மை தொடர்பான விஷயமல்ல; மாறாக கல்விமுறை சார்ந்தது எஎன்பதை நாம் உணர வேண்டும்.''
          
         ஆனால், அடிப்படை ஆங்கில அறிவு இல்லாதவர்களுக்கு எதிர்காலமே இல்லை என்ற கருத்து இங்கு வலுவாக இருக்கிறதே?
      "இது ஒரு தவறான முன்கருத்து. கூடுதலாக ஒரு மொழியைத் தெரிந்துவைத்திருப்பதன் மூலம் மேலும் பல வாய்ப்புகள் கிடைக்கும் என்பது உண்மைதான்.  ஆனால், நீங்கள் நான்கு மொழிகளைக் கற்றிருப்பதாலேயே அறிவாளி ஆகிவிட முடியாது. ஆங்கிலம் அல்ல; எந்தவொரு மொழியைக் கற்பதையும் நாம் குறைகூறவில்லை. ஆனால், எந்தவொரு மொழியைக் கற்பதற்கும் தாய்மொழியே அடித்தளம். அடித்தளமே சரியில்லாத நிலையில் அதற்கு மேல் அடுத்தடுத்தக் கட்டடங்களை எப்படி எழுப்ப முடியும்?
       ஆனால், தமிழ்நாட்டில் அடித்தளத்தையும் அதன் மீது அடுக்கடுக்கான தளங்களையும் ஒரே நேரத்தில் கட்டுகிறீர்கள். இப்படி ஒரே நேரத்தில் குழந்தைகளிடம் பல மொழிகளைத் திணிப்பது யதேச்சதிகாரம்!

       இதற்குத் தீர்வாக நீங்கள் எதைக் கூறுவீர்கள்?
      "மொழியைக் கற்பிக்க அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கணிதம், அறிவியல் துறைகளுக்கு எப்படி அந்தந்தத் துறை நிபுணர்கள் பயிற்சியளிக்கிறார்களே அதேபோல மொழிகளைக் கற்பிக்கவும் மொழியியலாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஒரு குழந்தையின் மண், வேர், கலாசாரம் ஆகியவை அதன் தாய்மொழியிலேயே புதைந்திருக்கின்றன. தாய்மொழிப் புலனின்றி ஆழமான அறிவாற்றலும் நுட்பமான படைப்பாற்றலும் சாத்தியமில்லை. எனவே, தாய்மொழியில் போதிய புலனின்றி இரண்டாவது மொழியை அறிமுகப்படுத்தக்கூடாது.
     எழுத்துகள் வடிவிலான கற்பித்தலுக்கு மாற்றாகக் காட்சிகள் வாயிலாக விவரிக்கும் கற்பித்தலை முன்னிலைப்படுத்த வேண்டும்.
     எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான கல்விவிமுறை சாத்தியப்படுவதில்லை. எனவே, அந்தந்தக் குழந்தைகளுக்கேற்ப}சூழல்களுக்கேற்ப பல்வேறு கல்விமுறையை மாற்றியமைப்பதுபற்றி சிந்திக்க வேண்டும்.
       எல்லாவற்றுக்கும் மேலாக, எந்தவொரு விஷயத்தையும் கற்றுக்கொள்ள குழந்தைகள் எடுத்துக்கொள்ளும் நேரத்தை நாம் அனுமதிக்க வேண்டும். மிக முக்கியமாக - குழந்தைகளுக்கான எந்தவொரு விஷயத்தை தேர்ந்தெடுக்கும்போதும் அவர்கள் விருப்பம் வழி நின்று தேர்ந்தெடுக்க வேண்டும்.''
 2006  'தினமணி கொண்டாட்டம்'


Labels:

1 Comments:

Blogger குடிமகன் said...

என்றோ எடுத்த பேட்டியானலும், சமச்சீர் கல்வி பற்றிய குழப்பம் நடக்கும் இந்த காலகட்டத்தில் மீண்டும் ஒருமுறை தினமணியில் வெளியிடலாம்.

July 1, 2011 at 4:35 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home