26.9.10

எப்படி கட்டப்பட்டிருக்கும் இப்படி ஓர் அற்புதம்?


   ராஜராஜேச்சரத்தின் நெடிதுயர்ந்த ஸ்ரீ விமானத்தைப் பார்க்க நேரும்போதெல்லாம் என்னுள் இந்தக் கேள்வி எழும்: எப்படி கட்டப்பட்டிருக்கும் இப்படி ஓர் அற்புதம்?
  இந்தக் கேள்விக்கு ஒரே மாதிரியான பதில்தான் கிடைக்கிறது: ஸ்ரீ விமானத்தைச் சுற்றி மண் சாய்வுத்தளம் அமைக்கப்பட்டு, அதன் வழியாக யானைகள் துணையுடன் கற்கள் கொண்டுசெல்லப்பட்டு கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
   தஞ்சாவூர்ப் பகுதியில் இது தொடர்பாக  சரளமாகப் புழங்கும் இரு கதைகள் உண்டு.
ஒன்று, பெரிய கோயிலைச் சுற்றி குளங்கள் வெட்டப்பட்டு, அவற்றின் மூலம் பெறப்பட்ட மண்ணால் மண் சாரம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த கதைக்குச் சாட்சியாக குளங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. மற்றொன்று, தஞ்சாவூருக்கு வடகிழக்கேயுள்ள சாரப்பள்ளம் என்னும் ஊரிலிருந்து மண் சாய்வுதளம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்தக் கதைக்கு சாட்சியாக சாரப்பள்ளம் ஊர் சுட்டிக்காட்டப்படுகிறது.
    ஆனால், இந்த விளக்கங்கள் எப்போதுமே எனக்கு திருப்தி அளித்ததில்லை. நாம் நம் முன்னோரின் திறனைக் குறைத்து மதிப்பிடுகிறோமோ என்று தோன்றும். இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ராஜராஜேச்சரத்தில் ஸ்ரீ விமானத்தின் மையத்தில் இருக்கிறது பெருவுடையார் திருமேனி. இதிலிருந்து ஏறத்தாழ 191 அடி உயர இடைவெளிக்கு அப்பால் உச்சத்தில் இருக்கிறது ஸ்ரீ விமானத்தின் சிகரக் கலசம். பெருவுடையார் திருமேனியின் மையமும் சிகரக் கலசத்தின் மையமும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கின்றன. இந்த நேர்க்கோட்டைக் கற்பனை செய்தவாறே சுற்றியுள்ள ஸ்ரீ விமானத்தைக் கற்பனை செய்யுங்கள். எப்பேர்ப்பட்ட மகத்துவமான கட்டமைப்பு இது?!
   நவீனங்கள் எழுச்சிபெற்ற ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.  நாம் வசிக்கும் இந்தப் புவிக் கோளத்தின் எந்த ஒரு பகுதியையும் நினைத்த மாத்திரத்தில் அணுகவும் மாற்றியமைக்கவும் அழிக்கவுமான தொழில்நுட்பத்தை, சாதனங்களை, வல்லமையை நாம் பெற்றிருக்கிறோம். ஆனால், இன்றைக்கு நாம் கொண்டிருக்கும் இந்த நவீன வசதிகள் அனைத்தையும் பயன்படுத்தி இப்படியொரு மகத்துவத்தை விஞ்சக்கூடிய ஒரு கோயிலை இதே துல்லியத்துடன் நம்மால் கட்டியெழுப்ப முடியுமா? சந்தேகம்தான். ஆனால், முடியும் என்று சாத்தியமாக்கிய நம் முன்னோரின் தொழில்நுட்பம் எத்தகையானதாக இருந்திருக்கும்? நிச்சயம் இப்படியோர் கட்டுமானத் திறன் ஒரேயொரு கட்டடத்தில் வெளிப்படக் கூடியதல்ல. நீண்ட கால மரபின் உச்சமாகவே இந்தப் படைப்பு முகிழ்ந்திருக்க வேண்டும். அப்படியென்றால், நம்முடைய
முன்னோரின் மரபு எத்தகையதாக இருந்திருக்கும்?
   நீண்ட காலமாக அழுத்திக்கொண்டிருந்த கேள்வி இது:  எப்படி கட்டப்பட்டிருக்கும் இப்படி ஓர் அற்புதம்?  
  அண்மையில் ஒரு தகவல் கிடைத்தது. ராஜராஜ சோழன் ஒரு நிலப்பகுதியை கீழ்முந்திரியாகப் பிரித்திருக்கிறான் என்ற தகவல் அது. கீழ்முந்திரி என்பது கீழ்கணக்கிலுள்ள ஓர் அளவு.
     ஒன்றைப் பங்கு போட கையாளப்பட்ட கணக்கே கீழ்கணக்கு. முக்கால் என்ற அளவில் தொடங்கும் அந்தக் கணக்கு அதிசாரம் என்ற அளவில் முடிகிறது. முக்கால் என்பது ஒரு ரொட்டியின் நான்கில் மூன்று பங்கை குறிக்கிறது (3/4) என்றால், அதிசாரம் என்பது ஒரு ரொட்டியின் பதினெட்டு லட்சத்து முப்பத்தியெட்டாயிரத்து நானூறில் ஒரு பங்கைக் குறிக்கிறது (1/18,38,400). இதில், கீழ்முந்திரி  என்பது ஒரு ரொட்டியின் லட்சத்து இரண்டாயிரத்து நானூறு (1/1,02,400) கூறுகளில் ஒரு பங்கைக் குறிக்கும்.
   நவீனத்தின் உச்சத்தில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் இந்தத் தலைமுறையைச் சேர்ந்த நமக்கு கீழ்கணக்கு தெரியாது. நமக்கு முந்தைய தலைமுறையினர் இந்தக் கணக்கை அறிந்திருக்கலாம். எனினும், அந்தக் கணக்கிலுள்ள பல்வேறு வகைமைகளில் எந்த அளவு வரை கையாண்டிருக்கக் கூடும் என்று தெரியவில்லை.  ஆனால், ராஜராஜன் தலைமுறையோ மிக நுட்பமான இந்தக் கீழ்கணக்கை முழுமையாக அறிந்திருக்கிறது. நுட்பமான கீழ்கணக்கை முழுமையாகக் கையாண்டிருக்கிறது.
   எப்படி கட்டப்பட்டிருக்கும் இப்படி ஓர் அற்புதம்?
  இந்தத் தலைமுறையின் அறிவிலிருந்து அந்தத் தலைமுறையின் அறிவை அறுதியிட முனைவது அறிவீனமாகத் தோன்றுகிறது.
   எப்படி கட்டப்பட்டிருக்கும் இப்படி ஓர் அற்புதம்?
  இந்தக் கேள்விக்கான பதில் இப்போது புலப்படுவதுபோல இருக்கிறது.

செப். 2010 தினமணி

Labels:

1 Comments:

Blogger Unknown said...

Dear Samas,
I totally agree with your views as I also have the same feeling like you when people say that a slope was built to put the Vimanam in place. Another interesting fact that I heard was that the stones were brought from Tiruvanamalai and that the main temple was built in just 6 years. After hearing all this I feel that this could not have been possible without some divine help.

regards,
Rajendran S

September 27, 2010 at 4:26 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home