21.4.10

இப்படி ஒரு அப்பா! இப்படி இரு பிள்ளைகள்!!

       ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கலாம். இந்தக் கதையைக் கொஞ்சம் கேளுங்கள். ரோச்சுக்கு அப்போது வயது 35. தன்னுடைய இரு பெண் குழந்தைகளும் படிக்கும் பள்ளி ஆண்டு விழாவுக்குச் செல்கிறார் ரோச். விழாவில் அவருடைய பிள்ளைகளின் வகுப்பாசிரியை பேசுகிறார். குழந்தைகள் அதிக மதிப்பெண்களைக் குவிப்பது எப்படி என்று விளக்கும் அவர், அதற்கான நேர அட்டவணையையும் ஒப்பிக்கிறார். காலை 6 மணிக்குத் தொடங்கும் அந்த அட்டவணை இரவு 10 மணிக்கு முடிகிறது. ரோச் வீடு திரும்புகிறார்.
       நல்லது. நீங்கள் ரோச்சாக இருந்தால் என்ன செய்வீர்கள்? அது ஒருபுறமிருக்கட்டும். ரோச் என்ன செய்தார் தெரியுமா?
        மறுநாள் தன் இரு பிள்ளைகளையும் அழைக்கிறார். கதையை நன்றாகக் கவனித்துக்கொள்ளுங்கள். அப்போது அவரது மூத்த மகள் எஸ்தர் 5-ம் வகுப்பு மாணவி. இளையவர் ஜூடி 3-ம் வகுப்பு மாணவி. இருவரிடமும் ரோச் என்ன கேட்டார் தெரியுமா?
"இனியும் நீங்கள் இப்படிபட்ட ஆசிரியைகளிடமும் பள்ளிக்கூடத்திலும் படிக்க வேண்டுமா என்ன?''
      அப்புறம் நடந்த கதையை எஸ்தர், ஜூடி வார்த்தைகளாலேயே கேட்போம்:
   "அப்பா இப்படி ஒரு கேள்வியைக் கேட்பார் என்று நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. குழப்பமாக இருந்தது. ஆனால், பள்ளிக்கூடம் போகாமல் வீட்டிலிருந்தபடியே படிக்கலாம் என்பதை நினைத்தபோது ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. சரியென்று சொல்லிவிட்டோம்.
      வீட்டிலிருந்து படிப்பது என்றால், வீட்டுக்கு ஆசிரியர் வருவதோ, அப்பா - அம்மாவே ஆசிரியர்களாக மாறுவதோ கிடையாது. பாடப் புத்தகங்களை வைத்துக்கொண்டு நாங்களாகவே படிக்க வேண்டும். சந்தேகம் கேட்டால் அப்பா விளக்குவார். அவ்வளவே.
ஆனால், அடிக்கடி நாங்கள் சந்தேகம் கேட்டதாக நினைவில்லை. போகப்போக படிக்கும் நேரம் தவிர்த்து நிறைய நேரம் இருப்பதை உணர்ந்தோம். அப்பாவிடம் சொன்னோம். அப்பா எங்களுடைய விருப்பத்தைக் கேட்டார். தற்காப்பு, யோகா, இசை, நீச்சல், வாகன ஓட்டுநர் பயிற்சி என்று எங்கள் விருப்பம்போல் வாய்ப்புகளை அமைத்துக் கொடுத்தார். அதே நேரத்தில் வீட்டை அழகாகப் பராமரிக்கவும் சமையல் உள்ளிட்ட அடிப்படை வீட்டு வேலைகளைக் கச்சிதமாக செய்யவும் அம்மாவிடமிருந்து கற்றுக்கொண்டோம்.
        இப்போது சமூகத்திலும் சரி; வீட்டிலும் சரி, எல்லாவற்றையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என்கிறார்கள் எஸ்தர் - ஜூடி சகோதரிகள்.
        விசேஷம் இதில் இல்லை. கதையை மேலே கேளுங்கள். தன்னுடைய 6 -ம் வகுப்பு படிப்போடு வீட்டுக்கு வந்த எஸ்தர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பெற்ற மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? 91 சதம். தொடர்ந்து பிளஸ் 2 தேர்வில் 80 சதம்.
அதற்குப் பின், தன்னுடைய ஐ.ஏ.எஸ். கனவைக் குறிவைத்த அவர் அதற்கு முதல்கட்டமாக பி.எல். படிக்க தீர்மானித்தார்.சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். கூடவே ஒரு வழக்குரைஞரிடமும் பணிக்கு சேர்ந்தார். மூன்றாம் ஆண்டின் நிறைவில் கல்லூரி அளித்த பி.ஏ. சான்றிதழைக் கொண்டு தொலைநிலைக் கல்விமுறையில் எம்.ஏ. சேர்ந்தார். ஒரே நேரத்தில் எம்.ஏ., பி.எல். இரண்டையும் முடித்தார்.
இதில் குறிப்பிடத் தக்க விஷயம் என்னவென்றால், இரண்டு படிப்புகளிலும் முதல் வகுப்பில் அவர் தேறியதோடு, சட்டக் கல்லூரியில் தங்கப் பதக்கத்தையும் வென்றார் என்பதாகும்.
        படிப்பை முடித்து வெளியே வந்த எஸ்தருக்கு 5 இலக்க ஊதியத்தில் நல்ல வேலை காத்திருந்தது. கொஞ்ச நாட்கள் வேலைக்குப் போனார். பின்னர், தன் அப்பாவிடம் ஒரு நாள் சொன்னார்: "அப்பா, நான் வேலையை விட்டுவிட்டு தொடர்ந்து படிக்க நினைக்கிறேன்.''
    ரோச் நீங்களோ, நானோ அல்லவே. ஆகையால், வழக்கம்போல் அவர் சொன்னார்: "சரி. உன் விருப்பம்போல் செய்.''
     இப்போது எஸ்தர் தன்னுடைய கனவுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார். அதிக நேரமில்லை. ஆகையால், இதே போன்ற ஒரு கிளைக் கதையை ஜூடிக்கும் நீங்கள் கற்பனை செய்துகொள்ளுங்கள். அவர் இப்போது ஊடகத் துறைக் கனவுக்குத் தன்னைத் தயாராக்கிக்கொண்டிருக்கிறார்.
        நிற்க. நம் கதையின் நாயகன் ரோச்சிடம் கொஞ்சம் பேசுவோமா? "என்னுடைய அம்மா, அப்பா இருவருமே ஆசிரியர்கள். ரொம்பவும் ஒழுக்கமான பிள்ளையாக என்னை வளர்க்க அவர்கள் நினைத்தார்கள். நானோ அதற்கு நேர் எதிராக வளர்ந்தேன். என்னை ஒளித்துவைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. ஆமாம். எனக்கு சகல கெட்டப் பழக்கங்களும் இருந்தன. மிகக் குறைந்த மதிப்பெண்களுடன் நான் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றது என்னுடைய பெற்றோருக்கே ஆச்சரியமாக இருந்தது. அதற்கு பிறகுதான் முறையாக ஆங்கிலத்தை எழுத்துக்கூட்டிப் படிக்கவே நான் ஆரம்பித்தேன் (பின்னாட்களில் கல்லூரி வாழ்க்கை திருப்புமுனையாக அமைந்ததும் வெறிகொண்டு படிக்க ஆரம்பித்ததும் தனிக் கதை).
       ஆனால், என்னுடைய இளமைப் பருவத்தை நான் நன்கு அனுபவித்தேன். அந்தப் பருவத்தில் எனக்கு கிடைத்த சுதந்திரமும் அனுபவங்களுமே என்னைப் பக்குவப்படுத்தின என்பதை உணர்ந்திருந்தேன்.
      இந்நிலையில், என் பிள்ளைகள் படித்த பள்ளிக்கு ஆண்டு விழாவுக்கு சென்றபோது என்னிடம் மிகப் பெரிய கேள்வி எழுந்தது. என் குழந்தைகளுக்கு எந்த அளவுக்கு சுதந்திரமான வாழ்வை நான் தரப் போகிறேன் என்ற அந்தக் கேள்வி என்னை வெகுவாக அழுத்தியது. அதற்கு நான் தேடிக்கொண்ட பதிலே என் குழந்தைகள் இன்று அடைந்திருக்கும் நிலை.
        நம் சமூகத்தில் ஏராளமான கல்விக்கூடங்கள் இருக்கின்றன; ஏராளமான கல்விமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஆனால், எதுவொன்றும் குழந்தைகளுக்கானதாக இல்லை என்பதே நானறிந்த உண்மை. ஆகையால், கடைசியில் எனக்கு இந்த வழியைத் தவிர வேறு எதுவுமில்லாமல் போயிற்று.
          ஆனால், இது மிக எஎளிதான ஒன்றல்ல. பெற்றோர்கள் முழுமையாக பங்கேற்கும் ஒரு வாழ்க்கைமுறையில் மட்டுமே இது சாத்தியம். தன் வாழ்வை விருப்பப்படி வாழ்ந்துகொண்டு குழந்தைகளிடம் மட்டும் மிகையொழுக்கத்தை எதிர்பார்க்கும் வழமையான ஷபெற்றோர் சர்வாதிகாரம்' இங்கு உதவாது.
       உங்கள் குழந்தைகள் மதிக்கத்தக்கவர்களாக வேண்டும் என்றால், அது உங்களிடமிருந்தே தொடங்க வேண்டும். அவர்கள் சிரிக்க வேண்டும் என்றால் நீங்கள் விகடகவியாக மாறித்தான் ஆக வேண்டும். பிள்ளைகள் விளையாடுவதற்காகவே திருச்சி நகரின் பிரதான இடத்திலிருந்த வீட்டிலிருந்து நகருக்கு வெளியே உள்ள இந்த விசாலமான வீட்டுக்கு குடியேறினோம். அவர்களிடம் கூடி விளையாடும் குழந்தைகளை ஈர்ப்பதற்காக மாடியில் அவர்களுக்கென்று ஒரு விளையாட்டுத் தளத்தை உருவாக்கினோம். எந்தவொரு விஷயமாக இருந்தாலும் அனைவரும் கூடி விவாதித்து முடிவெடுத்தோம். பிள்ளைகளிடம் நாங்கள் எதையும் மறைக்கவில்லை. பிள்ளைகளும் எங்களிடம் எதையும் ஒளிக்கவில்லை'' சிரிக்கிறார் ரோச். ஓரப் பார்வையால் தம் தந்தையின் பேச்சை ரசித்துக்கொண்டிருக்கின்றனர் அவருடைய இரு பிள்ளைகளும்.
       கதை கேட்பது என்றால் எல்லோருமே பிள்ளைகள்தான். கதை இன்னும் முடியவில்லை. உங்கள் வீட்டில் பிள்ளைகள் இருக்கிறார்கள்தானே?!
2009 'தினமணி கொண்டாட்டம்'

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home