26.4.10

சேவையின் பெயரால் ஒரு பயங்கரவாதம்

உலகில் எந்த மருத்துவர்களுக்கும் இல்லாத சிறப்பு இந்திய மருத்துவர்களுக்கு உண்டு. இங்குதான் கடவுளுக்கு அடுத்த நிலையில் மருத்துவர்கள் நம்பப்படுகிறார்கள்; கொண்டாடப்படுகிறார்கள். அதனாலேயே விமர்சனத்துக்கும் கண்காணிப்புக்கும் அப்பாற்பட்ட அமைப்பாக பெரும்பாலும் மருத்துவச் சமூகம் இருந்து வந்திருக்கிறது. ஆனால், அத்தகைய மதிப்பீடுகள் எல்லாம் காலவதியாதியாகும் காலம் இது.
குழந்தைகளைக் கடத்துவோரிடம் பணம் பெற்றுக்கொண்டு குழந்தைகளின் உறுப்புகளைத் துண்டித்து அவர்களை முடமாக்குவது, உடல் உறுப்புகளைத் திருடுவது, இறந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பது... இன்னும் என்னென்ன சாத்தியங்கள் இருக்கின்றனவோ அத்தனையும் செய்து பார்த்துவிட்டார்கள் இந்திய மருத்துவர்கள். இவையெல்லாம் எங்கோ, யாருக்கோ, எப்போதோ நடக்கக் கூடியவை எனப் பெரும்பாலனோர் கருதலாம். ஆனால், தன்னிடம் முழுழுமையாக சரணாகதி அடையும் நோயாளிகளுக்கு, நம் மருத்துவர்களில் 80 சதவீதத்தினர் தேவையே இல்லாத மருந்துகளைப் பரிந்துரைக்கின்றனர் என்றால் அவர்களைப் பற்றி என்ன சொல்வது? நம் நாட்டில் ஆண்டுக்கு ரூ. 50 ஆயிரம் கோடிக்கு மருந்துகள் விற்கப்படுகின்றன. இதில் தேவையற்ற மருந்துகளின் விற்பனை ரூ. 16,250 கோடி. இந்திய கிராமங்களில் விற்கப்படும் 76 சதவீத மருந்துகள் தேவையற்ற மருந்துகளே. தவிர, போலி மருந்துகள் விற்பனையும் இங்குதான் அதிகம்.
   அது என்ன தேவையற்ற மருந்துகள்?
   ஒரு நோயாளிக்கு இரு நாள்களுக்கு ஒரு வகை மருந்து போதுமானது என்ற சூழலில் அவருக்கு நான்கு நாள்களுக்கு இரு வகையான மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டால், கூடுதலாக பரிந்துரைக்கப்படும் மருந்து தேவையற்ற மருந்து. அதேபோல், ஒவ்வொரு மருந்தும் சில மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தலாம். குறிப்பிட்ட நோய்க்கு வேறு மருந்தே இல்லாத சூழலில் அந்த மருந்து அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும். பின்னாளில், அதைவிட அபாயம் குறைந்த மருந்து கண்டறியப்பட்டால் முந்தைய மருந்துக்குத் தடை விதிக்கப்படும். அந்த மருந்துகளை விற்பனைசெய்யக் கூடாது. இப்படி சர்வதேச அளவில் நிராகரிக்கப்பட்ட மருந்துகளும் உரிய அனுமதி பெறும் முன் கள்ளத்தனமாக பரிசோதனை முயற்சிக்காக விநியோகிக்கப்படும் மருந்துகளும்கூட நோயாளிகளுக்குத் தேவையற்ற மருந்துகளே.
    தங்கள் சந்தையை விரிவுப்படுத்த மருந்து நிறுவனங்கள் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையான தந்திரத்தைப் பயன்படுத்திவருகின்றன. நவீன வாழ்க்கை முறையைப் பயன்படுத்தி வளர்ந்த நாடுகளில் 'மருந்தே உணவு' என்ற நிலையை உருவாக்கிவரும் இந்நிறுவனங்கள், மூன்றாம் உலக நாடுகளைத் தங்களது பரிசோதனை முயற்சிகளுக்கான களமாகவும் தேவையற்ற மருந்துகளைத் திணிக்கும் குப்பைத் தொட்டிகளாகவும் பயன்படுத்திவருகின்றன.
     மருந்து நிறுவனங்கள் தங்கள் ஆராய்ச்சிப் பணிகளுக்காக, விளம்பரங்களுக்காக செலவிடும் தொகையைவிட பல மடங்கு 'மருத்துவர்களைக் கைப்பற்ற'ச்  செலவிடுகின்றன. மருத்துவர்களுக்குப் 'பரிசளிக்க' மட்டும் மருந்து நிறுவனங்கள் செலவிடும் தொகை ஆண்டுக்கு ரூ. 3000 கோடி. இது தவிர, மருந்துக் கடைகள் மூலமாகவும் மருத்துவர்களுக்கு 'தரகுத் தொகை' வரும். மருத்துவர்கள் - மருந்துக் கடைகள் - மருந்து நிறுவனங்கள் இடையே உள்ள எழுதப்படாத 'தரகு ஒப்பந்தம்'தான் தேவையற்ற மருந்துகள் விற்பனைக்கு முக்கிய காரணம்.
     தேவையற்ற, தடை செய்யப்பட்ட மருந்துகளால் நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்பு வெறும் பொருள் இழப்பு மட்டுமல்ல. அந்த மருந்துகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் மற்றும் கெட்ட விளைவுகளே முக்கியமானதாகும். மனித உடலமைப்பு பழக்கம் சார்ந்தது. சாதாரண நோய்களுக்காக சக்தி வாய்ந்த மருந்தை உட்கொள்ளும் நோயாளிகளுக்கு பின்னாளில், தீவிரமான நோயால் அவர்கள் பாதிக்கப்படும்போது அந்த மருந்து பலனளிப்பதில்லை. இதனால், மேலும் அதிகமான மருந்துகள் அவர்களுக்குத் தேவைப்படுகின்றன. அதிகமான மருந்துகள் பயன்பாட்டால் காலப்போக்கில் நோய் எதிர்ப்புத் தன்மையை உடல் இழக்கிறது. நோய்கள் அதிகரிக்கின்றன; உறுப்புகள் சேதமடைகின்றன; படிப்படியாக மரணம் நிகழ்கிறது.
       இவையெல்லாமும் அறிந்துதான் மருந்து நிறுவனங்கள் தேவையற்ற மருந்துகளைத் திணிக்கின்றன. மருத்துவர்கள் தேவையற்ற மருந்துகளைப் பரிந்துரைக்கின்றனர். அரசுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன.
    கடவுளின் பெயரால், நாட்டின் பெயரால், மதத்தின் பெயரால் நடக்கும் பயங்கரவாதத்துக்கு சற்றும் குறைவில்லாத சேவையின் பெயரிலான பயங்கரவாதம் இது. புனித மதிப்பீடுகளைத் தகர்த்தெறிந்துவிட்டு மிகுந்த ஜாக்கிரதையுடன் மருத்துவத் துறையை அணுக வேண்டிய காலம் இது. நம்மை நாம் காப்பற்றிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை!
பிரசுர விவரம்: 'தினமணி', 2006

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home