26.4.10

தேவை துணை நகரமல்ல

       மாற்று தலைநகரம், துணை நகரங்களைத் திட்டமிடுவதில் ஆட்சியாளர்களுக்கு காலங்காலமாகவே ஓர் அலாதியான ஆர்வம் இருந்துவருகிறது. நவீன காலத்தின் மக்களாட்சி மன்னர்களை மட்டும் இதற்கு விதிவிலக்காகப் பார்க்க  முடியுமா என்ன?
        சென்னை மட்டுமல்ல; இந்தியப் பெருநகரங்கள், மாநகரங்கள் அனைத்துமே நகர்மயமாதலின் மோசமான விளைவுகளைச் சந்திக்கத் தொடங்கிவிட்டன. இட நெருக்கடி, குடிநீர்த் தட்டுப்பாடு, சுற்றுச்சூழல் கேடு என்று நம்முடைய நகரங்கள் வாழத் தகுதியற்றவையாகிவருகின்றன. இயற்கைக்கும் நகரங்களுக்கும் இடையேயான அந்நியமாதல் இயந்திர கதியில் நடந்துவருகிறது. இந்த பிரச்னைக்குத் துணை நகரம் ஒரு நல்லத் தீர்வென்றே பலரும் கருதுகிறார்கள். ஆனால், துணை நகரங்கள் அமைப்பதன் மூலமாக பெருநகரங்களின் பிரச்னைகள் தீர்ந்துவிடுமா என்ற கேள்விக்கு முன், நாம் பதிலளிக்க வேண்டிய கேள்வி பெருநகரங்களின் இந்நிலைக்கு அடிப்படைக் காரணம் என்ன என்பதேயாகும்.
      சென்னையையே எடுத்துக்கொள்வோம். நாள்தோறும் ஏறத்தாழ 45 லட்சம் பேர் சென்னையில் பயணம் மேற்கொள்கின்றனர். இவர்களில் வெளியூர்களிலிருந்து வந்து செல்வோர் எண்ணிக்கை கணிசமானது. நாள்தோறும் இத்தனை பேர் என்ன காரணத்துக்காக இங்கு வந்து செல்கிறார்கள்? சென்னையில் வசிப்போரில் பூர்வக்குடிகள் எத்தனை பேர்; குடியேறியவர்கள் எத்தனை பேர்? இப்போது துணை நகரம் அமைக்கப்பட்டால் சென்னையில் வசிப்போர் எத்தனை பேர் அங்கு குடிமாறிச் செல்வர்?
       சென்னை வந்து நிற்கும் ஒவ்வொரு பஸ்ஸிலிருந்தும் சராசரியாக 3 பேர் வேலைவாய்ப்பைத் தேடி இறங்குகின்றனர். இன்னும்.. வழக்கு விசாரணைக்காக, மேலதிகாரிகளின் நடவடிக்கைகளுக்காக, சினிமா கனவுகளுக்காக, பிரபலங்களைக் காண்பதற்காக என நீண்டுகொண்டே போகும் பட்டியல். அதிகாரங்கள் அனைத்தும் ஓரிடத்தில் குவித்ததன் பலன் இது. சமச்சீரற்ற வளர்ச்சியை ஊக்குவித்த தேசம் அதன் பின்விளைவுகளைச் சந்தித்தேத் தீர வேண்டும். துணை நகரங்கள் அமைக்கப்படுவதால் நகரங்கள் பெருவணிக மையங்களாகத்தான் மாறுமேயன்றி அடிப்படை வசதிகள் மேம்படாது. துணை நகரத்தை அரசு அமைக்காவிடினும் பெருநகரங்கள் காலச்சூழலில் விரிவடையத்தானே செய்யுயும் என்று நீங்கள் கேட்கலாம். ஆம். விரிவடையத்தான் செய்யும். ஆனால், அதற்கு மேலும் பல ஆண்டுகளாகலாம். மாறாக, அரசே அதைச் செயலாக்கும்போது விரிவாக்கம் துரிதமாக்கப்படுவதுடன் துணை நகரங்களைச் சுற்றி மேலும் புது நகர்கள் உருவாகும். துரிதமாக்கப்படுவது விரிவாக்கம் மட்டுமல்ல; அழிவும்தான்.
விவசாயம் செய்யாத நிலங்களின் பயன் பெரும்பாலானோருக்குத் தெரிவதில்லை. தரிசு நிலம் என்றால் பயனற்றது என்றே கருதுகிறார்கள். உண்மையில், இயற்கைச் சுழற்சி முறையில் பயனற்றது என்ற சொல்லுக்கு இடமேயில்லை. பல்லுயிரியம் என்னும் இருத்தலுக்கான அடிப்படையே கிராமங்களை அழிக்கும் இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தகர்ந்து போகும். எல்லாவற்றுக்கும் மேலாக நகரத்தில் வசிப்போருக்கும் இதனால் பெரும் பயன் விளையப்போவதில்லை. வட சென்னை - தென் சென்னை, அம்பத்தூர் - திருவான்மியூர் இடையே அடிப்படை வசதிகளிலும் உள் கட்டமைப்பிலும் உள்ள வேறுபாடுகளைக்கொண்டே இதை உணர்ந்துகொள்ள முடியும்.
         சென்னை மட்டுமல்ல, படிப்படியாக அனைத்து நகரங்களும் இப்பிரச்னையைச் சந்தித்தே தீர வேண்டும். ஆகையால், இதுகுறித்து உண்மையான தொலைநோக்குப் பார்வை நமக்கு அவசியமாகிறது. உலகம் எதிர்நோக்கியுள்ள பெரும் பிரச்னையான தண்ணீர் பிரச்னைக்கும் நாம் இங்கு பிரதான கவனம் அளிப்பது முக்கியம். சரி, என்ன தீர்வு?
       நாடெங்கும் சமச்சீரான வளர்ச்சி வேண்டும். நாட்டின் பிரதான தொழிலான வேளாண் துறைக்குப் புத்துயிர் அளிக்க வேண்டும். நகரங்களில் கிடைக்கும் அதே வசதிகள் - குறிப்பாக போக்குவரத்து மற்றும் சுகாதார வசதிகள் அனைத்துக் கிராமங்களிலும் உருவாக்கப்பட வேண்டும். அந்தந்தப் பகுதிகேற்ப தொழில்சார் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். அரசுத் துறைத் தலைமையகங்கள் அந்தந்தத் துறைசார் தொழில்கள் நடைபெறும் பகுதிகளுக்கு இடமாற்ற வேண்டும். கிராமங்கள் சுயச்சார்பில் இயங்கத்தக்க வகையிலான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வாகனக் கட்டுப்பாடு, பெருநகரங்களைச் சுற்றி புதிய குடியிருப்புப் பகுதிகள் விரிவாக்கம் - தொழிற்பேட்டைகள் உருவாக்கம் போன்றவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். இப்படி நிறைய வேண்டும். விஷயம் சிக்கலானது. ஆண்டாண்டுகளாய் நாம் செய்த தவறுகளின் நீட்சி இது. நமது அனைத்துத் தவறுகளுக்கும் ஒரே திட்டம் தீர்வாகிவிடும் என்று நம்புவது சுய ஆறுதலை மட்டுமே தேடித் தரும். ஆகையால், ஒரு நீண்ட பயணத்தை நாம் தொடங்க வேண்டும்; இங்கிருந்து, இப்போதிலிருந்து, ஒவ்வோர் அடியாக எடுத்துவைத்து, ஒரு நீண்ட பயணத்தை நாம் தொடங்க வேண்டும், எதை நோக்கி என்றால்  கிராமங்களை நோக்கி; துணை நகரங்களை நோக்கி அல்ல.

2006 தினமணி 

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home