22.4.10

இது மீன்பிடித் திருவிழாக் காலம்!

      கடல்புறத்தில் மீன்பிடித் திருவிழா என்பதற்கான பொருள் வேறு. ஆனால், நாட்டுப்புற வாழ்க்கையில் மீன்பிடித் திருவிழா என்பது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வரும் முக்கியமான ஒரு கொண்டாட்டம். கோடையில் நீர் வற்றும் சூழலில் உள்ள ஏரிகள், கண்மாய்கள், குளங்களில் அதிகாலையில் தொடங்கும் மீன்பிடித் திருவிழாவும் அதையொட்டி பிற்பகலில் நடைபெறும் களேபர விருந்துக்கும் பழக்கமானவர்களுக்கு நீர்நிலைகளில் தண்ணீர் சேராத வருடங்கள் கசப்பானவை.
    தமிழகத்தில் தொன்றுதொட்டு, இடையிடையே விட்டுவிட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றுவந்த மீன்பிடித் திருவிழாக்கள் இப்போது ஒரு புதிய கலாசாரமாகப் பரவிவருகின்றன. ஒரு கோயில் திருவிழாவுக்கான எல்லாவித முன் தயாரிப்புகளுடனும் மிகுந்த உற்சாகத்துடனும் மீன்பிடித் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டுகின்றன. முன்னெப்போதும் பழக்கமில்லாத கிராமங்கள்கூட மீன்பிடித் திருவிழாக்களை வெகு விமரிசையாக நடத்தத் தொடங்கியுள்ளன.
        மீன்பிடித் திருவிழாபற்றி முன்அறிமுகம் இல்லாதவர்களுக்காக இங்கே ஒரு முன்கதை.
கிராமங்களில் நீர்நிலைகளுக்கு எப்போதுமே தனிக் கௌரவமும் சட்டத் திட்டங்களும் உண்டு. இந்தச் சட்டத் திட்டங்கள் ஊருக்கு ஊர் மாறுபடும். ஓர் ஊரில் கண்மாய், கிராமத்துக்குச் சொந்தமாக இருந்தால் குளம், கோயிலுக்குச் சொந்தமாக இருக்கும். கிராமத்துக்குச் சொந்தமான கண்மாய், கிராம மக்கள் பயன்பாட்டுக்கானது. கோயிலுக்குச் சொந்தமான குளம், கோயில் காரியங்களுக்கும் பக்தர்கள் பயன்பாட்டுக்கும் மட்டுமே உரித்தானதாக இருக்கும்.
சில ஊர்களில் குளம், கண்மாய் இரண்டில் ஏதேனும் ஒன்று மட்டுமே இருக்கும். இப்படிபட்ட ஊர்களில் நீர்நிலையிலுள்ள தண்ணீர், கிராமத்துக்குச் சொந்தமானதாக இருக்கும்; மீன்படு, கோயிலுக்குச் சொந்தமாக இருக்கும்.
       கோயிலுக்குச் சொந்தமான நீர்நிலைகளைப் பெரும்பாலான ஊர்களில் குத்தகைக்கு விடுவார்கள். இவ்வாறு குத்தகைக்குவிடப்படாத கோயில் நீர்நிலையிலும் ஊருக்குச் சொந்தமான நீர்நிலையிலும் மீன் பிடிக்க யாருக்கும் அனுமதி கிடையாது. ஒவ்வோர் ஆண்டும் தண்ணீர் வற்றும் நிலை நெருங்கும்போது கிராமப் பஞ்சாயத்து கூடும். ஊர்க்காரர்கள் கூடி ஒரு நல்ல நாளைத் தேர்ந்தெடுப்பர். ஊர்க்காரர்களின் சொந்தபந்தங்களுக்குத் தகவல் பறக்கும்.
அந்த நன்னாளின் அதிகாலையில் ஊரிலுள்ள எல்லோரும் சொந்தபந்தங்கள் சூழ, ஊர் நடுவிலுள்ள கோயிலிலிருந்து, வாத்தியங்கள் இசைக்க, மேள - தாளங்கள் முழுங்க ஊர்வலமாகப் புறப்படுவர்; நீர்நிலையை அடைந்ததும் அங்குள்ள காவல் தெய்வத்துக்குப் பூஜை செய்வர்.
       இதன் பின், ஊர் பூசாரியும் கிராம முக்கியஸ்தர்களும் நீர்நிலையில் இறங்க, தொடர்ந்து ஊர்க்காரர்கள் குளத்தில் இறங்குவர். கிராம முக்கியஸ்தர் தலையசைத்ததும் மீன்பிடி தொடங்கும். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என எவ்வித வித்தியாசமும் இன்றி தடி, துணி, தூண்டில், வலை என அகப்பட்டதை கையில்கொண்டு தொடங்கும் இந்த மீன்பிடி, சளைக்கசளைக்க நடக்கும். பெரிய மீன் கிடைத்தவர்களும் நிறைய மீன்களை அள்ளியவர்களும் மீன்படுக் கொண்டாட்டம் கொள்வர்.
         இதனிடையே, மீன்பிடி நடந்துகொண்டிருக்கும்போதே வேட்டை நன்றாக இருந்தால் வீடு நோக்கி பெண்கள் கரையேறிவிடுவர். விருந்துக்கான முன்வேலைகளை அவர்கள் பார்த்து வைத்திருக்கவும் ஆண்கள் மீன்களோடு வீடு வந்து சேரவும் சரியாக இருக்கும்.
காலையிலிருந்து சாப்பிடாமல் உழைத்து, களித்து, களைத்த மனிதன் முன் சுடச்சுட சோறு, சுண்டியிழுக்கும் மீன் குழம்பு, தொட்டுக்கைக்கு மீன் வறுவல், பேச்சுத் துணைக்கு சொந்தபந்தம் என எல்லாம் கூடிய விருந்து கசக்கவா செய்யும்? அந்தப் பிற்பகல் விருந்தின் தொடர்ச்சி இரவிலும் சில வீடுகளில் மறுநாள் காலையிலும்கூட நீளும்.
       தமிழர் நாட்டுப்புற வாழ்வின் பாரம்பரியமான இந்த மீன்பிடித் திருவிழா, பண்டைக்காலத்தில் ஈட்டியுடன் மீன் வேட்டையாடும் விழாவாக நடந்ததாகவும் காலப்போக்கில் இத்திருவிழாவே வழக்கொழிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும், தென் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த கிராமங்களிலும் இவ்விழா இடையிடையே சில தொய்வுகளுக்குப் பிறகு தொடர்ந்து கொண்டாடப்பட்டுவருகிறது.
இந்நிலையில், சில ஆண்டுகள் முன்பு வரை சாதாரணமாக நடைபெற்றுவந்த இவ்விழா, கோயில் திருவிழாக்களுக்கு மட்டுமே உரிய விமிரிசையுடன் இப்போது பல ஊர்களிலும் புதிய கலாசாரமாகப் பரவிவருகிறது.
   "பாரம்பரியமாக பல ஆண்டுகளாக குத்தகைக்குவிடப்பட்ட கோயில் நீர்நிலைகள்கூட இப்போது குத்தகைக்குவிடப்படுவதில்லை. வீட்டுக்கு இவ்வளவு தொகை அல்லது கண்மாயில் இறங்கும் நபருக்கு இவ்வளவு தொகை எனக் குறிப்பிட்ட ஒரு தொகையை ஊர்க்காரர்களே நிர்ணயித்து கோயில் உண்டியலில் செலுத்திவிடுகின்றனர். மீன்பிடித் திருவிழா எல்லோரையும் வசீகரிக்கத் தொடங்கியுள்ளது'' என்கிறார் பெரம்பலூரைச் சேர்ந்த ராஜேந்திரன்.
  "காலம் செல்லச் செல்ல நம் சமூகத்தில் கொண்டாட்டங்களுக்கான இடம் குறைந்துவருகிறது. பாரம்பரியத் திருவிழாக்களும் கேளிக்கைகளும் அருகிவருகின்றன. இந்த விழா நம்முடைய பாரம்பரியக் கொண்டாட்டத்தை மீட்டெடுக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் மீன்பிடித் திருவிழாக்களின் விமரிசை கூடிக்கொண்டேபோகிறது'' என்கிறார் சமூகவியலாளர் இளங். கார்த்திகேயன்.
         தமிழகத்தின் எதிர்வரும் கோடைக்காலங்கள் மீன்பிடித் திருவிழாக் காலங்களாக உருமாறலாம். உங்களுக்கான வலைக்கு இப்போதே சொல்லிவையுங்கள்!

2008 'தினமணி கதிர்'

Labels:

1 Comments:

Blogger -தோழன் மபா, தமிழன் வீதி said...

நல்ல கட்டுரை விரிவான தகவல். உங்களது பதிவிலிருந்து இந்த புகைப்படைத்தை எனது பதிவிற்கு பயன்படுத்தி கொள்கிறேன். நன்றி!

August 20, 2011 at 8:34 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home