27.4.10

இழக்கப்போகும் இறையாண்மை

      
ஒரு நாட்டுக்கு அணுசக்தி தேவையா இல்லையா என்பதில் அந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம். ஆனால், நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் விஷயங்களில் ஒரு நல்ல குடிமகனுக்கு எதிர்ப்பைத் தவிர வேறு கருத்துகள் இருக்கும் என்று தோன்றவில்லை.
அணு ஆயதப் பரவல் தடை ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது முதல் கடந்த நாற்பது ஆண்டுகளாக இந்திய அணுசக்தித் துறையைத் தன் கண்காணிப்புக்குள் கொண்டுவர அணு ஆயுத வல்லரசுகள் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டுவந்தன. ஆனால், எந்த நிபந்தனைகளுக்கும் கட்டுப்படாமல் இருந்த இந்திய அணுசக்தித் துறை, அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாமலேயே இப்போது அவர்களுடைய கண்காணிப்பில் - கட்டுப்பாட்டில் போகிறது. நாட்டின் 14 அணு உலைகளை சர்வதேச அணுசக்தி முகமை கண்காணிக்க அனுமதி அளிக்கப்போவதன் மூலம் நூற்றுக் கணக்கான விஞ்ஞானிகளின் தன்னலமற்ற சேவையையும் நாட்டின் இறையாண்மையையும் ஒருசேர பறிகொடுக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. ஹோமி பாபாவும் விக்ரம் சாராபாயும் ஹோமி சேத்னாவும் ராஜா ராமண்ணாவும் தன்னலம் பாராமல் உழைத்து வளர்த்த இந்திய அணு சக்தித் துறை தன் சொந்த அரசாலேயே இன்று சுய அதிகாரத்தை இழக்கின்றன.
     இந்திய அணுசக்தித் துறை இன்று அடைந்திருக்கும் வளர்ச்சி சாதாரணமானதல்ல; தடைகளையும் முட்களையுமே பாதையாகக் கொண்ட ஒரு துறையின் வளர்ச்சி அது. இந்த வளர்ச்சியின் பெரும்பான்மை பகுதியானது நம் விஞ்ஞானிகளின் சுய முயற்சிகளால் உருவாக்கப்பட்டது. இந்தியா 1974 -ல் தன்னுடைய முதல் அணுகுண்டு சோதனையை நிகழ்த்தியபோது அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி என்று இத்துறையில் இந்தியாவுக்கு அதுவரை உதவிவந்த எல்லா நாடுகளும் ஒதுங்கிக்கொண்டன (சோவியத் ஒன்றியம் மட்டும் சிதறும் வரை ரகசியமாக சில உதவிகளை அளித்துவந்தது). அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் இந்தியா கையொப்பமிட வேண்டும் என்று நிர்ப்பந்தித்து ஏற்கெனவே நம் மீது ஏராளமான தடைகளை விதித்திருந்த அமெரிக்கா, நாம் அணுகுண்டு பரிசோதனை மேற்கொண்ட பின்னர் மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தது. இந்திய அணுசக்தித் திட்டங்களுக்கு தொழில்நுட்பத்தையோ எரிபொருளையோ வழங்கக்கூடாது என்பதற்காக ஒரு கூட்டமைப்பையே (என்எஸ்ஜி) அந்நாடு உருவாக்கியது. ரகசியமாக உதவிய ஓரிரு நாடுகளுக்கும் மிகக் கடுமையாக எதிர்வினையாற்றியது. ஆனால், எல்லா தடைகளையும் மீறி இரண்டாம் முறையாக 1998-ல் பொக்ரானில் இரண்டாம் முறை அணுகுண்டு சோதனை நடத்தியதன் மூலம் இந்தியாவின் சுய அணு ஆற்றலை வல்லரசுகளுக்கு உணர்த்தினார்கள் நம்முடைய விஞ்ஞானிகள்.
    இன்றும் இந்திய மின்சக்தித் துறையில் மகத்தான மாற்றங்களை தங்களால் உருவாக்க முடியும் என்றே நம் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். உலகிலேயே அதிகமான தோரிய ஆதாரத்தைப் பெற்றிருக்கும் நாம், தோரியத்தை எரிபொருளாகக் கொண்ட முன்னேறிய தொழில்நுட்பத்தைப் பெறும்போது மின் துறையில் தன்னிறைவைப் பெறலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்த ஆராய்ச்சியில் மிக முன்னேறிய நிலையில் நாம் இருக்கிறோம். ஆராய்ச்சி முழு வெற்றியடையும்போது 6 லட்சம் மெகாவாட் மின்சாரத்தை நாம் உற்பத்திசெய்ய முடியும்; அடுத்த இரு நூற்றாண்டுகளுக்கான மின் தேவையை நாமே சொந்தமாகப் பூர்த்திசெய்துகொள்ள முடியும். எனினும், இதற்கு கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படும் என்று நம் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதற்குள் நம்முடைய அரசியல்வாதிகள் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்டார்கள்.
      இந்த ஒப்பந்தம் அமலக்கு வரும் அந்த நாளில், ராணுவ நோக்கில் அமைக்கப்பட்ட 8 அணு உலைகள் தவிர்த்து எஞ்சிய 14 அணு உலைகளும் சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் வரும் அந்த நாளில் இந்திய அணு உலைகளின் ரகசியங்களை மட்டும் நாம் இழக்கப்போவதில்லை; நாம் இதுவரை கையாண்டுவரும் தொழில்நுட்பம், மேற்கொண்டுவரும் ஆராய்ச்சிகள், விஞ்ஞானிகள்பற்றிய விவரங்கள், ரகசியமாக சேமித்து வைத்திருக்கும் அணு ஆயுத தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் என்று எல்லாவற்றையும் இழக்கப்போகிறோம். சர்வதேச அளவில் வெளியுறவுக் கொள்கையில் தொடங்கி அனைத்து விஷயங்களிலும் நம்முடைய தனித்தன்மையை இழக்கப்போகிறோம். நம்முடைய இறையாண்மையையே இழக்கப்போகிறோம்.
2007, தினமணி

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home