மேம்பாடும் அழித்தொழிப்பும்
தஞ்சாவூரின் கௌரவமான அடையாளங்களில் ஒன்று ரயில் நிலையம். இங்குள்ள தனித்தன்மை மிக்க கட்டடங்களுல் இந்த ரயில் நிலையமும் ஒன்று. ஆனால், இப்போது அதற்கு ஓர் ஆபத்து நேர்ந்திருக்கிறது.
மேம்பாட்டுப் பணி என்ற பெயரில் ரயில் நிலைய வளாகத்திலுள்ள பழமையான கட்டடங்களை இடித்துத் தள்ளியிருப்பதுடன் புதிய கட்டமைப்பை உருவாக்குகிறோம் என்ற பெயரில் பல அபத்தங்களையும் அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார்கள். நடைமேடையில் மழைநீரை உள்வாங்கிக்கொள்ளும் அமைப்பைத் தகர்த்துவிட்டு வழுக்கும் தன்மைகொண்ட 'மார்பிள்' கற்களைப் பதிக்கிறார்கள். கடினமான சரக்குகளைக் கையாளும் கருங்கல் பதித்த தளத்தை, எளிதில் நொறுங்கிப்போகும் 'டைல்ஸ்' தளமாக்குகிறார்கள். 'ஆஸ்பெஸ்டாஸ்' கூரைக்குப் பதில், அதைவிட மெல்லிய இரும்புக் கூரை; கழிப்பறைகளுக்கு முட்டை ஓடு போன்ற 'பிளாஸ்டிக்' கதவுகள்; மேற்கூரையே இல்லாத இடங்களில் மின்னணு அறிவிப்புப் பலகைகள் என்று இந்த அபத்தங்களுக்கு எல்லையே இல்லை. தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு மட்டும் இந்த நிலை ஏற்படவில்லை. நாட்டின் பெரும்பாலான ரயில் நிலையங்கள் இன்று இந்த ஆபத்தைச் சந்தித்திருக்கின்றன; சகித்துக்கொள்ள முடியவில்லை.

ரயில் நிலையங்கள் எப்போதுமே நம்முடைய நேசத்துக்குரிய கட்டுமானங்களாக இருப்பதன் காரணம் பயணங்களுடனான அவற்றின் தொடர்பு மட்டும் இல்லை. அவற்றில் உறைந்திருக்கும் உன்னதமான 'இந்தோ - சார்சனிக்' கட்டடக் கலையும்கூடத்தான்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைப்பற்றியபோது எல்லா தளங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டதுபோல் கட்டடக் கலையிலும் மாற்றம் ஏற்பட்டது. ஆனால், இந்தியக் கட்டடக் கலை மரபின் உன்னதத்தை உணர்ந்திருந்த ஆங்கிலேயர்கள் இங்கு உருவாக்கிய கட்டடங்களை புராதன இந்தியக் கலையின் அடிப்படையிலேயே உருவாக்கினர். இந்தோ - மொஹல் - மேற்கத்திய கலை மரபுகளின் கூட்டுக் கலவையாக இவ்வகையில் அவர்கள் உருவாக்கிய கட்டடக் கலையே 'இந்தோ - சார்சனிக்' கட்டடக் கலையாகும். இம்முறையில் கட்டப்பட்ட கட்டடங்கள் கட்டட எழிலுக்கு மட்டும் பேர்போனவை அல்ல; வாழிடங்களுக்கான சரியான உதாரணங்களும்கூட. கோபுர கலசங்கள், வளைவு கோபுரங்கள், கூர் வளைவுகள், ஸ்தூபிகள், மினார்கள், உயர்ந்த விதானங்கள், மாட கோபுரங்கள் என அழகுக்கும் தடிமனான - உறுதியான இரும்பு உத்தரங்கள், பெரிய தூண்கள், வெப்பத்தை எதிர்கொள்ளும் கனத்த சுவர்கள், நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் தரும் நேருக்கு நேரான ஜன்னல்கள் என வசதிகளுக்கும் ஒரு சேர முன்னுரிமை அளிப்பது 'இந்தோ சார்சனிக்' கட்டடங்களின் சிறப்பம்சமாகும். 'இந்தியா கேட்', 'விக்டோரியா டெர்மினஸ்', 'மெட்ராஸ் மியூசியம்', 'விக்டோரியா மெமோரியல்' என்று இந்தியாவில் மட்டுமின்றி தங்கள் நாட்டிலும் பிரைட்டனில் 'ராயல் பெவிலியன்', சந்தர்லாந்தில் 'எலிஃபென்ட் டீ ரும்ஸ்' என்று இக்கலையின் உன்னதத்தைப் பறைச்சாற்றும் ஏராளமான கட்டடங்களை ஆங்கிலேயர்கள் கட்டினர். ஒருகட்டத்தில் ராபர்ட் ஃபெலோஸ் சிஸ்ஹாம், சார்லஸ் மேன்ட், ஹென்றி இர்வின் என்று இக்கட்டடக் கலைக்கென்று மிகச் சிறந்த கலைஞர்கள் மரபே உருவானது.
ஆனால், ரயில் நிலையங்கள், அஞ்சல் நிலையங்கள், நீதிமன்றங்கள், வங்கிகள், ஆட்சி மன்றங்கள், கல்லூரிகள் என்று ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் இக்கட்டடக் கலையைப் பின்பற்றி இங்கு ஏராளமான கட்டடங்களை உருவாக்கியிருந்தாலும் காலப்போக்கில் அவற்றில் பல அடையாளம் மாறிவிட்டன. மிகப் பிரபலமான சில கட்டடங்கள் தவிர்த்து இன்றளவும் இந்த உன்னதமான கலையின் எச்சங்களாக பல்வேறு ஊர்களிலும் ரயில் நிலையங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. ஆனால், அடுத்த சில நூற்றாண்டுகளையேனும் தாங்கும் வலுவோடு நிற்கும் இந்தக் கலைப் பொக்கிஷங்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக தன்னுடைய அறியாமையால் மெனக்கெட்டு, பணம் செலவழித்து அழித்துக்கொண்டிருகிறது ரயில்வே துறை. பிரிட்டனிலோ பிரான்ஸிலோ இத்தகைய காரியங்கள் சாத்தியமில்லை. சீனாவும்கூட விழித்துக்கொண்டுவிட்டது. குயிங் ஆட்சியில் பிரசித்திப் பெற்ற தியானென்மென் வீதியை ரூ. 5,200 கோடி செலவிட்டு அந்நாடு பாதுகாத்துக்கொண்டிருக்கிறது. இங்கோ கேட்க ஆளில்லை என்பதால் அழித்தொழிப்புப் பணியை மேற்கொள்கிறது ரயில்வே துறை. இதற்கு மேம்பாட்டுப் பணி என்று பெயர் வேறு!
இந்திய ரயில்வே துறை வளர்ச்சி மீதான தன் அக்கறையைக் காட்ட எவ்வளவோ பணிகள் இருக்கின்றன. குறிப்பாக, நம்முடைய கிராமப்புற ரயில் நிலையங்களின் தேவைகள் ஏராளம். நடைமேடை கூரை கிடையாது. இருக்கைகள் கிடையாது. சரியான குடிநீர், கழிப்பறை வசதிகள்கூட கிடையாது என்று பரிதாபகரமாகக் காட்சியளிக்கின்றன நம்முடைய கிராமப்புற ரயில் நிலையங்கள். ரயில்வே துறை இங்கு தன் பார்வையைத் திருப்பலாம். உச்சி வெயிலிலும் கடும் மழையிலும் ரயில் எப்போது வரும் என்று தெரியாமால் இயற்கை உபாதையோடு பரிதவித்துக்கொண்டிருக்கும் கர்ப்பிணிகளும் வயோதிகர்களும் கொஞ்சம் வாழ்த்துவார்கள். கலையும் கொஞ்ச நாள் உயிரோடு இருக்கும்!
2007 'தினமணி'
2007 'தினமணி'
Labels: கட்டுரைகள்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home