28.4.10

எதிர்கொள்ளவிருக்கும் பெரிய சவால்

அரசியல்வாதிகள் எதை நினைக்கிறார்களோ எப்போதும் அதை நிறைவேற்றிவிடுகிறார்கள். நாம் எதைப் பேசுவோம் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்களோ அதைப்பற்றி நம்மை பேச வைத்துவிடுகிறார்கள். நாம் எதையெல்லாம் பேச மறந்துவிடுவோம் என அவர்கள் கணிக்கிறார்களோ அவற்றையெல்லாம் நாம் மறந்துவிடுகிறோம் வழக்கம்போல!




   நாடு அடுத்த 20 ஆண்டுகளில் எதிர்கொள்ளவிருக்கும் மிகப் பெரிய சவால்களில் பொது சுகாதாரம் முக்கிய இடத்தை வகிக்கிறது. உலகளவில் பொது சுகாதாரம் சார்ந்து மோசமான எதிர்காலத்தை எதிர்நோக்கியிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால், இதுகுறித்த எந்தப் பிரக்ஞையும் தமக்கு இல்லை என்று மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டிருக்கிறது அரசு.
அடிப்படையிலேயே நம் நாட்டின் சுகாதார உள் கட்டமைப்பு மிகப் பலவீனமானது. பெரும்பான்மையான நோய்கள் தண்ணீர் வழி தோன்றுபவை என மருத்துவ உலகம் மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டிருந்தாலும் நம் நாட்டில் 83.2 கோடி பேருக்கு குடிக்கவே நல்ல தண்ணீர் கிடைக்கவில்லை.
சுவாசிக்க புகையும் தூசியும் கலந்த காற்று, குடிக்க நச்சுத் தண்ணீர், சாப்பிட பூச்சிக்கொல்லியும் ரசாயனமும் கலந்த உணவு என்னும் மோசமான அடிப்படைச் சூழல் இந்தியர்களுக்கு நிகழ்காலத்திலேயே யதார்த்தம் ஆகிவிட்ட நிலையில் எதிர்காலம் எப்படியிருக்கும்?
      ஒரு நாட்டின் சுகாதாரத்தை உறுதி செய்வதில் அடிப்படைச் சூழல் எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு மருத்துவக் கட்டமைப்பும் அவசியம். அதனாலேயே, அடிப்படைச் சூழல் குலைந்து வருவதை உணர்ந்த வளர்ந்த நாடுகள் மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்தி வருகின்றன. ஆனால், நம் நாட்டிலோ அடிப்படைச் சூழல், மருத்துவக் கட்டமைப்பு இரண்டுமே மோசமான நிலையில் இருக்கின்றன.
    நம் நாட்டின் இப்போதைய மக்கள்தொகை 112 கோடி. அடுத்த 10 ஆண்டுகளில் இது 130 கோடியாக இருக்கும் என்று கூறுகிறார்கள். இந்த அதிகரிப்புக்கேற்ப நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பது இயல்பு என்றாலும் அன்றைய காலகட்டத்தில் நம் மக்கள்தொகையில் வயதானவர்களின் எண்ணிக்கை பெரும் பகுதியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஒவ்வோர் ஆயிரம் பேருக்கும் 4 மருத்துவர்கள் தேவைப்படுவார்கள் என மதிப்பிடப்படுகிறது.
      ஆனால், நம் நாட்டில் இன்றைய மக்கள்தொகை கணக்குப்படி 10 ஆயிரம் பேருக்கே 5 மருத்துவர்கள்தான் இருக்கிறார்கள். வளர்ந்த நாடுகளில் இந்த எண்ணிக்கை: பிரான்ஸ் 34; அமெரிக்கா 25; இங்கிலாந்து 23; கனடா 21.
        நாடு சுதந்திரமடைந்து இந்த 60 ஆண்டுகளில் நம்மால் 262 மருத்துவக் கல்லூரிகளையே உருவாக்க முடிந்திருக்கிறது. இந்தக் கல்லூரிகளில் 63 சத கல்லூரிகள் மஹாராஷ்டிரம், குஜராத், ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்களுக்குள் அடங்கிவிடுகிறது. வடகிழக்குகு மாநிலங்களில் வெறும் 3 சதவீத கல்லூரிகளே இருக்கின்றன. சராசரியாக ஆண்டுக்கு 28,000 மருத்துவர்களை நாம் உருவாக்குகிறோம்.
      ஆனால், அடுத்த 20 ஆண்டுகளில் நமக்கு 52 லட்சம் மருத்துவர்கள் தேவை. இப்போதுள்ள கட்டமைப்பைக் கொண்டு கணக்கிட்டால் இதில் ஐந்தில் ஒரு பங்கு மருத்துவர்களே அப்போது இருப்பார்கள். மருத்துவர்கள் நிலை இப்படியென்றால் அதைவிட மோசம் செவிலியர்கள் எண்ணிக்கை. ஆண்டுக்கு 28,000 மருத்துவர்களை வெளிக்கொணரும் நாம் அவர்களுக்கு உதவ வெறும் 20,000 செவிலியர்களையே உருவாக்கி வருகிறோம். மருத்துவம் சார் துணைப் படிப்புகளை முடித்து வெளியேறுவோர் எண்ணிக்கையோ இன்னும் படுமோசம். உள்ளபடியே நமக்குத் தேவையான மருத்துவர்களையும் செவிலியர்களையும் உருவாக்க மேலும் 2400 கல்லூரிகள் தேவை.
     ஆனால், ஏற்கெனவே உள்ள கல்லூரிகளிலேயே பல கல்லூரிகள் மோசமான உள்கட்டமைப்பில் போதிய பேராசிரியர்கள்கூட இன்றி திணறிக்கொண்டிருக்கும் சூழலில் அரசே நினைத்தாலும் இத்தனை மருத்துவக் கல்லூரிகளை உடனடியாக உருவாக்கிவிட முடியாது.
     இதனால், சுகாதாரத் துறைக்குக் கூடுதல் கவனம் அளிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அந்தத் துறைக்கு 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் ரூ. 1.36 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது 10-வது ஐந்தாண்டு திட்ட ஒதுக்கீட்டைவிட ரூ. 91,000 கோடி அதிகம் என்றாலும் நம்முடைய எதிர்காலத் தேவைகளுக்கான கட்டமைப்பைப் பற்றி கற்பனை செய்து பார்க்கக்கூட இத்தொகை காணாது.
      இந்நிலையில், இந்த நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத் துறை சார்ந்த பல திட்டங்கள், கொள்கைகள், அறிவிப்புகள் எதிர்பார்க்கப்பட்டன. ஆனால், அரசோ ஒதுக்கீட்டில் வெறும் 15 சதவீதம் உயர்வுடன் ரூ. 16,500 கோடியுடன் சுகாதாரத் துறையைக் கை கழுவியிருக்கிறது. மருத்துவத் தேவையை தனி நபரால் பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்ற சூழல் நிலவும் வளர்ந்த நாடுகளே சுகாதாரத் துறைக்கு வருவாயில் 8 முதல் 15 சதவீதம் வரை ஒதுக்கீடு செய்யும் நிலையில், பெரும்பான்மையினர் அரசையே நம்பியிருக்கும் இந்தியாவோ வெறும் 5 சதவீதத்தையே ஒதுக்கிவருகிறது.
        மருத்துவர்கள் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்பு பெரும்பாலும் நகரங்களில் எதிரொலிப்பதில்லை. பெரும் விபத்துகள், இயற்கைச் சீற்றங்கள், கொள்ளை நோய்கள் ஆகியவறின்போது மட்டுடும் இந்தப் பாதிப்பை உணரும் நகரவாசிகள் அப்போதைக்கு சப்தம் போடுவார்கள். பாதிப்பு நின்றவுடன் சப்தமும் நின்றுவிடும்.  ஆனால், மருத்துவ வசதி எட்டாத நூற்றுக்கணக்கான கிராமங்கள், மருத்துவர்களைத் தேடி பல கி.மீ. தொலைவு நடந்தே வரும் லட்சக்கணக்கான கிராம மக்கள் இன்னமும் இந்தியாவில் இருக்கின்றனர். என்ன வியாதியால் இறப்பு நிகழ்கிறது என்றே தெரியாமல் ஆயிரக்கணக்கான மரணங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.  ஆண்டுகள் ஆகஆக, மக்கள்தொகை பெருகப் பெருக, பற்றாக்குறை அதிகரிக்க அதிகரிக்க இந்தப் பிரச்னை மிகப் பெரிய சமூகப் பிரச்னையாக உருவெடுக்கப் போகிறது. தொடரும் நமது அலட்சியம் மருத்துவத்தை முற்றிலும் வணிகமயமாக்கப் போகிறது. ஆம். ஒரு நோயாளி தேசத்தின்  பெருமைமிக்கக் குடிமகன் ஆகத் தயாராகிக்கொண்டிருக்கிறோம் நாம்!

2007 'தினமணி', 

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home