மன்னார்குடி ஓர் அற்புதமான நகரம். இந்தியாவின் மிக நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்ட நகரங்களில் ஒன்று அது. ஒரு காலத்தில் சுமார் 6 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட நகரமாக அது இருந்தபோது, அந்தச் சின்ன நகரத்தில் நாட்டின் பெரிய குளங்களில் ஒன்றான 'ஹரித்ராநதி' உள்பட சிறிதும் பெரிதுமாக 98 குளங்கள் இருந்தன. இவை யாவும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருந்தன. வடுவூர் ஏரியிலிருந்து ஏறத்தாழ 15 கி.மீ. நீளம், 100 அடி அகலத்தில் வாய்க்கால் அமைக்கப்பட்டு அதன் வழியே தண்ணீர் கொண்டுவரப்பட்டு இந்தக் குளங்கள் நிரப்பப்பட்டன.
காவிரியின் கிளைநதியான பாமணி அரவணைத்திருக்க, மிகக் கச்சிதமாக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி அமைக்கப்பட்ட தெருக்களும் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி அமைக்கப்பட்ட வீதிகளும் சொல்லொண்ணா அழகை அந்த நகருக்குத் தந்தன. ஆங்கிலேயர்கள் அந்த நகரின் அழகை உணர்ந்திருந்தார்கள். 1866-ம் ஆண்டிலேயே மன்னார்குடியை நிர்வகிக்க நகர சபையை உருவாக்கினார்கள் அவர்கள்.